Lockdown 68 Days

னைவரைப்போல நானும் இந்தியாக்கு கொரோனா வராது என்று நம்பினேன் ஆனால், நடந்ததோ வேறு. மிகவும் கடுமையாக இருந்த முதல் இரு மாத ஊரடங்கை எப்படிக் கடந்து வந்தேன் என்பதே Covid Lockdown 68 Days கட்டுரை.

Covid Lockdown 68 Days

 

தொற்று நோயால் வீட்டினுள் மாதக்கணக்கில் வீட்டினுள் அடைந்து இருப்போம் என்று 2020 மார்ச் துவக்கத்தில் கூறி இருந்தால் கூட எவரும் நம்பி இருக்க மாட்டார்கள்.

இந்தியாக்கு வராது என்று நம்பியிருந்த நிலையில், வேகமாகப் பரவி வருவதைப் பார்த்து, ‘எதோ விவகாரமாக இருக்கும் போல!‘ என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போதே, அறிமுகமில்லாத ஊரடங்கு வந்து விட்டது.

ஐந்து நாட்கள் ஊரடங்கில் துவங்கி, 21 நாட்களாக நீட்டிக்கப்பட்டு பின் மாத கணக்கில் தொடர்ந்தது.

WhatsApp, ஃபேஸ்புக், ட்விட்டர் என்று எங்கும் கொரோனா செய்திகளே இருந்ததால், கொரோனா பற்றி அதிகம் எழுதக் கூடாது என்று முடிவெடுத்தேன்.

இதுவரை கொரோனா பற்றி இத்தளத்தில் எழுதிய கட்டுரைகள் மொத்தமே 4, அதிலும் இரண்டு வேறு உள்ளடக்கம். Image Credit

தமிழக அரசு ஊரடங்கு அறிவிப்பு

 

கோடை விடுமுறைக்காக 2020 மார்ச் 10 மனைவி, குழந்தைகள் அனைவரும் ஊருக்குச் சென்று விட்டார்கள்.

தமிழக அரசு மார்ச் 24 மாலை 6 மணி முதல் ஊரடங்கு அறிவித்தது.

நண்பர்களுடன் சென்னையில் இருந்தது, சிங்கப்பூரில் சில வருடங்கள் தனியாக இருந்தாலும் உணவகம் சென்று தான் சாப்பிட்டேன், சமையல் செய்யத் தெரியாது.

The Grand Sweets தொக்கு வாங்கி, சாதம் செய்து கொண்டால் சமாளித்துக்கொள்ளலாம் என்று நண்பர்கள் பரிந்துரைத்தார்கள்.

சென்னையில் இருக்கும் அக்கா, அவர் வீட்டுக்கே அழைத்தார், ஐந்து நாட்கள் தானே! சமாளிக்க முடியாதா! என்று ‘வரவில்லை‘ எனக் கூறி விட்டேன்.

காலியான பொருட்கள்

 

கடைகளில் அடிதடியாக இருந்தது, பொருட்கள் கிட்டத்தட்ட காலியாகி விட்டது. முருங்கைக்காய் தொக்கு, வத்தக்குழம்பு மட்டுமே கிடைத்தது.

இதற்கு முன்னர் முருங்கைக்காய் தொக்கு சாப்பிட்டதில்லை என்றாலும், வேறு வழி இல்லாமல் கிடைத்ததை வாங்கிக்கொண்டேன்.

தயிர் பாக்கெட், ஆப்பிள், கமலா ஆரஞ்சு, சப்போட்டா பழங்களை வரும் வழியில் வாங்கிக்கொண்டேன்.

மனைவி, அரிசி ஒரு மூட்டை வாங்கி வைத்துச் சென்று இருந்ததால், தப்பித்தேன். இல்லையென்றால் கடும் நெருக்கடியாகி இருக்கும்.

21 நாட்கள் ஊரடங்கு

 

5.30 மணிக்கு வீட்டுக்கு வந்த பிறகு, ‘இரவு 8 மணி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு‘ என்று பிரதமர் மோடி அறிவித்ததும் குபீர் என்றாகி விட்டது.

சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

ஐந்து நாட்கள் தானே என்று ஒரு தொக்கு, வத்தக்குழம்பு மட்டுமே வாங்கி இருந்தேன். அக்கா அழைத்த போதே சென்று இருக்கலாமோ என்று தோன்றியது.

கடையும், உணவகமும் இல்லாமல் 21 நாட்கள் எப்படிச் சமாளிப்பது? என்று கவலையாகி விட்டது.

அரை மணி நேரம் கடந்த பிறகு மனம் நிதானத்துக்கு வந்து, இனி கவலைப்படுவதால் பயனில்லை, சமாளித்துத் தான் ஆக வேண்டும் என்ற நிதர்சனம் உரைத்தது

துவக்கத்தில் கவலையாக, பயமாக இருந்தாலும், பின்னர் இதை எப்படிச் சமாளிப்போம் என்று சுவாரசியம் வந்து சவாலாக எடுத்துக்கொண்டேன்.

குடும்பத்தினர் கவலை

 

ஊரில் அம்மா, மனைவி, அக்கா அனைவரும் எப்படிச் சமாளிப்பாய் என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

கொரோனா பாதிப்பு அப்போது உச்சத்தில் இருந்ததால், வெளியே சென்று எதையும் வாங்க வேண்டாம் என்று அறிவுரை.

இவர்கள் பயத்தில் நியாமுள்ளது ஆனால், என்ன செய்வது?!

தற்போது இரண்டு பாட்டில்கள் மட்டுமே உள்ளது, இதையே 21 நாட்கள் சமாளிக்க வேண்டும், மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது தெரியாது.

எனவே, குழப்பான பயன்பாட்டு மனநிலை.

காலையில் தயிர்சாதம், மதியம் இரவு தொக்கு, தயிர் சாதம், வத்தக்குழம்பு. ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பிறகு சலிப்பானதை சமாளிக்கக் கமலா ஆரஞ்சு.

இப்படியே ஐந்து நாட்களைக் கடந்து விட்டேன்.

துவக்கத்தில் முதல் ஐந்து நாட்கள் ஊரடங்கு மலை போல இருந்தது, 21 நாட்கள் என்றதும் 5 நாட்கள் சிறு மணல் மேடு ஆகி கடந்து விட்டது 🙂 .

Gas

 

Gas குறைவாக உள்ளது என்று மனைவி கூறி இருந்தார். 21 நாட்கள் சமாளிக்க வேண்டுமே என்று சிக்கனமாகப் பயன்படுத்தினேன்.

வீட்டு அருகிலேயே Gas நிறுவனம் இருந்தது, கேட்டுக்கொண்டால் கொடுத்து விடுவார்கள் ஆனால், அப்போது யாரும் இல்லையே!

பின்னர் Gas அத்தியாவசிய தேவையில் வந்ததால், அவர்களுக்கான சேவை அனுமதிக்கப்பட்டது ஆனால், மனைவி திரும்ப வரும்வரை Gas தீரவில்லை 🙂 .

முருங்கைக்காய் தொக்கு

 

தொக்கு உள்ளே முருங்கைக்காயும் சேர்த்து இருப்பதால், அடர்த்தி காரணமாகக் கொஞ்சம் எடுத்தாலே விரைவாகக் காலி ஆகிறது.

முருங்கைக்காய் தொக்குச் சுவையாக இருந்தது. The Grand Sweets தொக்கு உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

தக்காளி, கொத்தமல்லி தொக்கு என்றால், சாப்பிட கூடுதலாக இருக்கும் ஆனால், இது அப்படியில்லை.

எனவே, இப்படியே தீர்ந்தால் என்ன செய்வது என்ற கவலை எட்டிப்பார்த்தாலும், சமாளிக்க ஏதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையிருந்தது.

Zomoto Swiggy

 

தமிழக அரசு Zomoto Swiggy யை அனுமதித்தது ஆனால், அவர்களிடம் வாங்கவும் பயம், வேறு வாய்ப்பும் இல்லை, காரணம் தொக்கு அளவு குறைவாக இருந்தது.

முழுவதும் தீர்த்து, பின்னர் Zomoto Swiggy க்கும் தடை விதித்து விட்டால், என்னாவது என்பதால், ஒரு வேளை மட்டும் வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.

தொக்கு, தயிர் சாப்பிட்டு நாக்கே செத்து விட்டது. ஒரு நாள் வழக்கம் போலப் பழைய சாதம், தயிர் சாப்பிட, ஒன்றையே சாப்பிடுவதால் வாந்தியே வந்து விட்டது.

காலையில் Zomoto வில் ஆர்டர் செய்து ரொம்ப நாளைக்குப் பிறகு நன்றாகச் சாப்பிட்டேன் 🙂 ஆனால், ஓரிரு வாரத்துக்குப் பிறகு அதுவும் சலித்து விட்டது.

சாம்பாரை பார்த்தாலே கடுப்பாக இருந்தது. இதற்கு நடுவில் வாங்கிய கடையில் கொரோனா வந்து மூடி விட்டதாகப் பீதியைக் கிளப்பினார்கள்.

ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்ததால் நான்கு நாட்களுக்கு ஒரு முறை இரவில் பீட்சா, SubWay ல் Cheese Signature Wrap சாப்பிட்டேன்.

பின்னர் அரசு கட்டுப்பாடுகளுடன் தள்ளுவண்டி, மளிகைக்கடைகளைத் திறக்க அனுமதித்ததால், திரும்பத் தயிர் வாங்கிக்கொண்டேன்.

புளிக்காய்ச்சல்

 

திரும்பச் சென்ற போது புளிக்காய்ச்சல் மட்டுமே இருந்தது. புளிச்சோறு பிடிக்காது ஆனால், இதையே தினமும் சாப்பிட வேண்டிய பரிதாப நிலை.

கமலா ஆரஞ்சு இருந்தால், சுவை மாற்றத்தில் கொஞ்சம் நன்றாக இருக்கும் ஆனால், அதுவும் கிடைக்கவில்லையென்பதால் சாப்பிட்ட பிறகு கடுப்பாக இருந்தது.

கிட்டத்தட்ட உயிர்வாழச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன்.

இடைப்பட்ட காலத்தில் Swiggy யில் ஒருவருக்குக் கொரோனா என்று செய்திகளில் வந்த பிறகு வீட்டில் பயந்து விட்டார்கள்.

இங்கே வாங்கவில்லை என்றால், சாப்பாட்டுக்கு என்ன செய்வது? எனவே, அவர்களைச் சமாதானப்படுத்தித் தொடர்ந்தேன்.

NETFLIX Amazon Hotstar

 

தினமும் சீரிஸ், திரைப்படங்கள் என்று பொழுது ஓடியது. தனிமை புதியதில்லை என்பதால், கடினமாக இல்லை. சாப்பாடு மட்டுமே பிரச்சனையாக இருந்தது.

சில நாட்கள் ஒரு நாளைக்கு நான்கு திரைப்படங்கள் பார்த்தேன். இரண்டே நாட்களில் ஒரு சீரிசையே முடித்தேன் 🙂 .

ரன் படத்தில் விவேக், மாதவனை தேடி பொது தொலைபேசியில் ஒவ்வொரு எண்ணாக அழைத்து இறுதியில் அந்தக் கடைக்காரருக்கே ஃபோன் செய்து விடுவார்.

அதுமாதிரி தாறுமாறாகப் பார்த்துப் படத்தின் பெயர் கூட நினைவு இல்லாமல், பார்த்த படத்தையே NETFLIX ல் பார்த்துக் கொஞ்ச நேரம் கழித்து, ‘ஆ! இது ஏற்கனவே பார்த்த படமா!‘ என்று குழம்பும் நிலையானது 🙂 .

Epass

 

இப்படியே இரு மாதங்கள் தொடர்ந்த நிலையில், தமிழக அரசு EPass அறிவித்ததில், ஊரில் உள்ள தாசில்தாரிடம் அனுமதி பெற்று மனைவி சென்னை வந்தார்.

ஜூன் முதல் வாரத்தில், மனைவி வரும் போதே ஒரு மாதத்துக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் மற்ற தேவையான பொருட்களைக் கொண்டு வந்து விட்டார்.

இதன் பிறகு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு என்பதால், சமாளிக்கக்கூடிய அளவிலேயே இருந்தது.

அலுவலகப் பணி

 

முழுமையான ஊரடங்கில் வெளியே செல்ல முடியாது என்பதாலும், தீவிர தொற்று காரணமாகவும் முதல் நான்கு மாதங்கள் அலுவலகம் செல்லவில்லை.

ஐடி சப்போர்ட் பிரிவில் இருப்பதால், துவக்கத்தில், வாரத்தில் மூன்று நாட்கள் என்று இருந்து, கடந்த மூன்று / நான்கு மாதங்களாகத் தினமும் அலுவலகம் செல்கிறேன்.

அலுவலக தொழில்நுட்ப பிரச்சனை, Hardware பிரச்சனைகள் வந்த போது, கடவுளின் அருளால் முழுமையான ஊரடங்கிலும் சமாளிக்க முடிந்தது, உதவி கிடைத்தது.

கூட்டமே இல்லாத சென்னை சாலையில் வாகனத்தில் செல்வது அற்புதமான தருணம்.

ACT Fibernet

 

ஊரடங்கு காலத்தில் (கிட்டத்தட்ட ஆறு மாதங்கள்) மொத்தமே 5 நிமிடங்கள் மட்டுமே இணையம் தடைபட்டது. மிகசிறப்பான சேவை.

சின்னப் பிரச்சனை கூட இல்லையென்பது பாராட்டத்தக்கது.

மற்ற Broadband நிறுவனங்கள், பல சலுகைகளைக் கொடுத்து முன்பு அழைத்த போதும், ACT சேவை சிறப்பாக இருந்ததால் மாறவில்லை.

மாறாத முடிவை நெருக்கடியான காலத்தில் ACT Justify செய்து விட்டது 🙂 .

மின்சாரம் தடையும் எங்கள் பகுதியில் இல்லை, ஒட்டுமொத்த காலத்தில் அதிகபட்சம் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைபட்டு இருக்கலாம்.

ஊரடங்கு காலத்தில் உதவியவை

 

The Grand Sweets, Zomoto, மளிகைக்கடை, தள்ளுவண்டி பழக்கடை, கமலா ஆரஞ்சு, ACT Fibernet, TN Electricity Board, Amazon Prime, NETFLIX, Hotstar தரமான உதவி.

தமிழக அரசு Zomoto Swiggy யை அனுமதித்தது, மிகப்பெரிய உதவியாக இருந்தது.

வேறு எவரிடமும் உதவி பெறவில்லை.

கடவுளின் கருணை

 

அவசியமில்லாத எந்தச் செயலையும் ஊரடங்கு காலத்தில் செய்யவில்லை, அவசியமற்று எங்கும் செல்லவில்லை, சுற்றிக்கொண்டு இருக்கவில்லை.

இருப்பினும் Zomoto, மளிகைக்கடை, பழக்கடைகளுக்குத் தேவை காரணமாக நேரடி தொடர்பு இருந்தது.

கடவுளின் ஆசிர்வாதம், பாதுகாப்பு முறைகள், நேர்மறை எண்ணங்கள் காரணமாகக் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் முக்கியமான காலகட்டத்தைக் கடந்து விட்டேன்.

பலரும் பலவிதமாகப் பயமுறுத்திய போதும், நம்பிக்கையிழக்கவில்லை, பயப்படவில்லை, மன உளைச்சல் ஆகவில்லை.

பெரிய சிக்கல்கள் இல்லாமல் இதைக் கடந்தது குறிப்பாகத் தனிமையில் இருந்த 68 நாட்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள்.

நம்பிக்கையே வாழ்க்கை

 

இறுதியாக, நான் எப்போதும் நம்பும், எப்போதெல்லாம் கஷ்டம் வருகிறதோ அப்போதெல்லாம் எங்கிருந்தாவது உதவி கிடைக்கும்.

இந்த முறையும் என்னால் இனி முடியாது எனும் நிலை வரும் போது தானாகவே உதவி கிடைத்தது / சூழ்நிலை சாதகமாகியது.

புரியாத ஏதோ ஒன்று எப்போதும் பாதுகாப்பு அரணாகவே உள்ளது.

சம்பவங்களின் நினைவுகள்

 

ஊரடங்கை கடந்து வந்த அனைவருக்கும் இது போல ஒரு அனுபவம் கண்டிப்பாக இருக்கும். மற்றவர்களை ஒப்பிடும் போது நான் கடந்து வந்தவை ஒன்றுமே இல்லை.

இருப்பினும் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே எழுதியுள்ளேன். பின்னாளில் என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்கக்கூடிய சம்பவங்களாக இருக்கும் 🙂 .

திரும்ப உருமாற்றம் அடைந்த கொரோனா என்று ஆரம்பித்துள்ளார்கள். இதுவும் கடந்து போகும் என்று நம்புவோம்.

கொரோனா காலத்தில் எழுதப்பட்ட கொரோனா தொடர்புக் கட்டுரைகள்

கொரோனா வைரஸ் WhatsApp புரளிகள்

சேமிப்பின் அவசியம் உணர்த்தும் கொரோனா

கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளுங்கள்

திரையரங்கு உரிமையாளர்கள் Vs தயாரிப்பாளர்கள்

Previous articleWhere Is My Train | App
Next articleOutfit: @nirali_design_house Photography: @raghul_raghupathy Cinematography: @s…