giriblog தளம் 14 ஆண்டுகள் முடிந்து 15 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
giriblog
2020 வருடம் தொழில்நுட்ப ரீதியாக எனக்கு முக்கியமான ஆண்டாகும். தளத்தின் வடிவமைப்பை 10 வருடங்களுக்குப் பிறகு, மாற்றியுள்ளேன். Image Credit
giriblog தளம் Google News தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இணைக்கப்பட்டு மாதங்கள் ஆனாலும், தற்போது தான் கூறுகிறேன்.
செய்தித்தளங்களை மட்டுமே கூகுள் இப்பட்டியலில் அனுமதிக்கும். பல்வேறு வகையான கட்டுரைகள் இருந்ததால், இத்தளத்தை கூகுள் எடுத்துக்கொண்டதோ என்னவோ! 🙂 . மகிழ்ச்சி.
கூகுள் தேடலுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
எழுத்தில் மாற்றம்
தற்போது படிப்பவர்கள் குறைந்து, பார்ப்பவர்கள் அதிகரித்துள்ளார்கள்.
எதையும் சுருக்கமாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். காணொளியிலேயே 3 / 4 நிமிடங்களைத் தாண்டினால் பொறுமையிழக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அப்படியெனில் படிக்க வைக்க எழுத்திலும் மாற்றம் செய்தாக வேண்டிய கட்டாயமாகிறது. இல்லையென்றால், படிப்பவர்களைத் தக்கவைப்பது எளிதல்ல.
எனவே, தேவையற்ற விளக்கங்களைக் குறைத்து விட்டேன். தொடர்ச்சியாகப் படிப்பவர்கள் உணர்ந்து இருப்பீர்கள் என்று கருதுகிறேன்.
சுயபுராணங்கள்
வாசகர் ஒருவர் குறிப்பிடும் போது ‘உங்களுடைய சுயபுராணங்களை எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்‘ என்று விமர்சனம் செய்து இருந்தார்.
பலர் இதை Personal Blog என்பதையே மறந்து விடுகிறார்கள். இங்கே என்னைப் பற்றி, என் எண்ணங்களைப் பற்றியே எழுத முடியும், செய்தித்தளம் போல எழுத முடியாது. அது போலத் தளங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன.
இருப்பினும் அவர் கூறியதை கவனத்தில் எடுத்துக்கொண்டு முடிந்தவரை தவிர்த்து வருகிறேன். தவிர்க்க ஆரம்பித்த பிறகு, இவர் கூறியது சரி என்று தோன்றுகிறது.
இது தொடர்பாக எதிர்பாராமல் படித்த ஒரு புத்தகமும் என் எழுத்தில் மாற்றம் கொண்டு வர முக்கியக்காரணம்.
எழுத்தாளர் சுஜாதா அறிவுரைகளைப் பின்பற்றி வந்தாலும், ஒவ்வொரு முறை எழுத்தில் மாற்றம் கொண்டு வரும் போதும் இன்னும் அவர் கூறிய முழுமையான பொருளை உணர அனுபவம் போதவில்லை என்பதையே உணர்த்துகிறது.
புத்தகங்கள்
Kindle உபயத்தால், அதிகப் புத்தகங்கள் படிக்க முடிகிறது, தொடர்ந்து விமர்சனங்களும் எழுத முடிகிறது.
படிக்கும் ஆர்வத்தை Kindle அதிகரித்துவிட்டது. இலவசமாக & குறைந்த விலையில் பல Kindle புத்தகங்கள் கிடைப்பதும் ஒரு காரணம்.
இத்தளத்தில் எழுதப்பட்ட 90% புத்தக விமர்சனங்கள், கூகுள் தேடுதலில் முதலாக அல்லது முதல் பக்கத்தில் இருக்கும், பரிசோதித்துப் பார்க்கலாம்.
Read: அமேசான் Kindle ஏன் வாங்க வேண்டும்?!
Video Blogging
படிப்பவர்கள் மிகக் குறைந்து வருகிறார்கள் என்பதை உணர முடிகிறது. இருப்பினும் சிலர் எப்போதும் போல ஆதரவு உற்சாகம் அளித்து வருவது மகிழ்ச்சி.
இங்கே எழுதும் சில கட்டுரைகளை YouTube ல் குரல் வழியில் போடத் திட்டமிட்டு வருகிறேன். இதைக் கடந்த இரு வருடங்களாகக் கூறி வருகிறேன் ஆனால், பொறுமையின்மை மற்றும் சில தொழில்நுட்ப காரணங்களால் தாமதம் ஆகிறது.
அனைவருக்கும் நன்றி
ஃபேஸ்புக் பேஜில் லைக் கொடுப்பவர்களுக்கு நன்றி 🙂 . சிலர் பல வருடங்களாகத் தொடர்கிறார்கள்.
10+ வருடங்களுக்கு மேலாகப் படித்துத் தொடர்ச்சியாகக் கருத்திடும் யாசினுக்குச் சிறப்பு நன்றி. இதுவரை 700+ கருத்துகள் இட்டுள்ளார்.
மாற்றுக்கருத்துக்கள் இருப்பினும் இது போலத் தொடர்வது எளிதல்ல. ஏனென்றால், பலர் திட்ட மட்டுமே என் தளம் வருவார்கள் 😀 .
மனசாட்சிக்கு சரி என்று படுவதை எழுதுகிறேன். மற்றவர்கள் நினைப்பதை பற்றி அக்கறையில்லை. அனைவரையும் திருப்தி செய்யும்படி எழுத முடியாது.
கவலைப்படாமல், பயப்படாமல் கருத்துகளை நாகரீகமாக முன்வைக்கிறேன். விமர்சனம் இருந்தால் கூறுங்கள், ஏற்புடையதாக இருந்தால் ஏற்றுக்கொள்வேன்.
உங்கள் எண்ணத்தைக் கருத்தை நானும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அவரவர் எண்ணங்கள் கருத்துகள் அவரவர்க்கு.
விவாதங்கள் மட்டுமே தெளிவைக் கொடுக்கும்.
RSS Feed
சில மாதங்களில் இத்தள RSS Feed முகவரி மாற்றுவேன், மாற்றினால் ரீடர், மின்னஞ்சல் வழி படிப்பவர்கள் திரும்ப ஒருமுறை பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்யவில்லை என்றால், என் கட்டுரைகள் உங்களுக்கு வராது.
முறையான அறிவிப்பின் மூலம் தான் செய்வேன். Google News ல் இணைந்து கொண்டால், தடங்கல் இல்லாமல் வரும். காரணம், முகவரி மாற்றத்தால், Google News Subscription ல் பாதிப்பு வராது.
என் கட்டுரைகளை Google News செயலி மற்றும் இணையத் தளத்தில் படிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் –> Google News giriblog சென்று Follow செய்து கொள்ளுங்கள்.
அனைவரின் ஆதரவுக்கும் நன்றி. தொடர்பில் இருங்கள்.