Delhi
oi-Vigneshkumar
டெல்லி: ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் குறித்து உலகெங்கும் தீவிர ஆய்வுகள் நடைபெறும் நிலையில், இந்தியன் ரயில்வே துறையும் இதில் களமிறங்கி உள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய ரயில் நெட்வொர்க்கை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியன் ரயில்வே இருந்து வருகிறது. இருந்த போதிலும், கடந்த பல ஆண்டுகளாகவே தொழில்நுட்ப ரீதியாக இந்தியன் ரயில்வே பின்னடைவைச் சந்தித்துள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இப்போது கடந்த சில ஆண்டுகளாகத் தான் ரயில்வே துறையில் சில புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத் போன்ற தொழில்நுட்பங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
சென்னையிலிருந்து பெங்களூருக்கு 20 நிமிடத்தில் செல்லலாம் – வழிகாட்டும் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்

இந்தியன் ரயில்வே
இதற்கிடையே ரயில்வே அமைச்சகம் சென்னை ஐஐடி உடன் இணைந்து உள்நாட்டிலேயே ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை உருவாக்க உடன்பாடு செய்துள்ளது. இந்தியாவில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் குறித்த பேச்சு 2017 முதலே இருந்து வருகிறது. அப்போது அப்போது ரயில்வே துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு, ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் தனக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

ஏன் முக்கியம்
அதன் பின்னர் ரயில்வே அமைச்சகத்திற்கும் அமெரிக்காவின் ஹைப்பர்லூப் ஒன் என்ற நிறுவனத்திற்கும் இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றன. இருப்பினும், அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்திற்குக் குறைந்த ஆற்றல் மட்டுமே தேவைப்படும் என்பதால் நாட்டை கார்பன் நியூட்டிரல் ஆக்குவதில் இந்த தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும். இதன் காரணமாக ஹைப்பர்லூப் திட்டம் என்பது இந்தியாவுக்குக் கவர்ச்சிகரமான திட்டமாகவே இருக்கும்.

ஹைப்பர்லூப் திட்டம் என்றால் என்ன
குறைந்த அழுத்தக் குழாய்களில் காந்தத்தின் இழுக்கும் சக்தியைப் பயன்படுத்தி விமானம் போன்ற வேகத்தில் ரயில்களை இயக்கும் தொழில்நுட்பத்தின் பெயர் தான் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம். இதைப் பயன்படுத்தி நாட்டில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துவது ரயில்வே துறையின் திட்டமாக இருந்தது. இதற்கான ஆய்வுகளை இணைந்து மேற்கொள்ளச் சரியான நிறுவனத்தை இந்தியன் ரயில்வே தேடிக் கொண்டிருந்தது.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடியை சேர்ந்த 70 மாணவர்களைக் கொண்ட “அவிஷ்கர் ஹைப்பர்லூப்” என்ற குழு, ஹைப்பர்லூப் அடிப்படையிலான போக்குவரத்து அமைப்பை மேம்படுத்த ஆய்வு செய்து வருவது ரயில்வே அமைச்சகத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து முதற்கட்ட ஆய்வுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இப்போது உள்நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை மேம்படுத்தச் சென்னை ஐஐடி உடன் இந்தியன் ரயில்வே இணைந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி குழு
இந்த அவிஷ்கர் ஹைபர்லூப் குழு கடந்த 2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட குழு. இவர்கள் 2019இல் நடைபெற்ற சர்வதேச ஹைபர்லூப் போட்டியில் டாப் 10 இடத்திற்குள் வந்திருந்தார்கள். இவர்கள் கடந்த மார்ச் மாதம் இந்தியன் ரயில்வே உடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து இருந்தனர். உற்பத்தி, பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்குதல், மின் சோதனை ஆகியவற்றில் இந்தியன் ரயில்வே துறையிடம் சென்னை ஐஐடி உதவி கோரி இருந்தது.

என்ன திட்டம்
இந்த சோதனை திட்டத்திற்குப் பொருளாதார ரீதியில் உதவவும் சென்னை ஐஐடி கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கு சுமார் ₹ 8.34 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி சுமார் 500 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும் கொண்ட ஹைபர்லூப் உருவாக்கப்படும். அமெரிக்காவில் உள்ள விர்ஜின் ஹைப்பர்லூப் மையத்திற்கு இணையான தொழில்நுட்பத்தில் இதை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். அதேநேரம் திட்டமிட்ட செலவை இது தாண்ட வாய்ப்புள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
English summary
Indian Railways will collaborate with IIT Madras for the development of an indigenous Hyperloop system: (புதிய ஹைபர்லூப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்தியன் ரயில்வே ) Indian Railways new plan on Hyperloop project.
Story first published: Friday, May 20, 2022, 19:17 [IST]