Chennai
oi-Noorul Ahamed Jahaber Ali
சென்னை: போக்குவரத்து விதிகளை போலீசார் மீறினால் சட்டப்படியும் துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கபில்குமார் சரத்கர் தெரிவித்துள்ளார்
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற போக்குவரத்து போலீசாரின் விதி சென்னையில் இன்று அமலுக்கு வந்தது.
இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து வருபவர்கள் ஹெல்மெட் அணியாததால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.
இ.பி.எஸ். கோட்டையில் கால் வைத்த ஸ்டாலின்.. சேலத்தில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

போலீசார் நடத்திய ஆய்வு
சென்னையில் சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்கள் தொடர்பாக மாநகர போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வுகளில் ஹெல்மெட் அணியாத பலரும் மரணிப்பது தெரியவந்தது. கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 98 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

பின்னால் சென்ற 127 பேர் பலி
அத்துடன் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிச்சென்ற 714 பேரும், பின்னால் அமர்ந்து சென்ற 127 பேரும் காயம் அடைந்து இருக்கின்றனர் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். இதனை தொடர்ந்தே இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இது இன்று காலை முதல் சென்னை மாநகரில் அமலுக்கு வந்துள்ளது.

சிறப்பு தணிக்கை
மேலும் சென்னை நகரில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 312 போக்குவரத்து சந்திப்புகளிலும் இது தொடர்பாக அதிரடிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு அந்த இடத்திலேயே அபராதங்களும் விதிக்கப்படுகின்றன.

கபில்குமார் சரத்கர்
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கபில்குமார் சரத்கர் தெரிவிக்கையில், “பைக் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதற்கு ஏற்கனவே சட்டம் இருக்கிறது. முன்கூட்டியே பல அறிவுரைகளை வாகன ஓட்டிகளுக்கு வழங்கியுள்ளோம். ஆய்வுக்கு பின் தீவிரப்படுத்தி இருக்கிறோம்.

போலீசார் மீதும் நடவடிக்கை
காவல்துறையை சேர்ந்தவர்கள் ஹெல்மெட் அணியாவிட்டாலும் கட்டாயமாக நடவடிக்கை எடுப்போம். போக்குவரத்து விதிமுறைகளை மீறும் போலீசார் பற்றி சமூக வலைதளங்களில் பதிவுகள் வருகின்றன. அவற்றை வைத்தும் நடவடிக்கை எடுக்கிறோம். போலீசார் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அவர்கள் போக்குவரத்து விதிகளை மீறினால் சட்டப்படியும் துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
English summary
Will take action for traffic violation even if it is police – Kapilkumar sarathkar
Story first published: Monday, May 23, 2022, 20:27 [IST]