Chennai
oi-Nantha Kumar R
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவிடாமல் தடுப்பதும் தான் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் துப்பாக்கிச்சூட்டில் இறந்தரவர்களுக்கு நாம் தமிழர் சார்பில் சீமான் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2018 மே மாதம் போராட்டம் நடந்தது. மே மாதம் 22ம் தேதி வன்முறை ஏற்பட்டது.
இதில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் நடந்ததன் 4ம் ஆண்டு நாள் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
15 பேர் படுகொலை- தூத்துக்குடி துப்பாக்கிசூடு.. இன்று 4-ம் ஆண்டு நினைவு அஞ்சலி- பலத்த பாதுகாப்பு!

4ம் ஆண்டு அஞ்சலி
இதையடுத்து தூத்துக்குடி முழுவதும் பல்வேறு இடங்களில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் குடும்பத்தினர் உள்பட பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். சில இடங்களில் பொதுமக்கள் பதாகைகள் ஏந்தி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனை போலீசார் ஏற்கவில்லை. அவர்களை கலைந்து செல்ல கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் அதனை மீறிய 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

டிடிவி தினகரன் இரங்கல்
மேலும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டதன் 4ம் ஆண்டு நினைவு தினத்தில் அவர்களுக்கு இதய அஞ்சலியை செலுத்துகிறேன். மனிதநேயமற்ற அச்சம்பவத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவிடாமல் தடுப்பதும் தான் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். அப்படி செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் இத்தகைய அதிகார அத்துமீறல்களுக்கு முடிவு கட்ட முடியும்” என குறிப்பிட்டள்ளார்.

நாம்தமிழர் சார்பில் நினைவஞ்சலி
மேலும் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் துப்பாக்கிச்சூட்டின் போது பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இறந்தவர்களின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் உறுதிமொழியும் எடுத்து கொண்டனர்.

ஏமாற்றும் திராவிட கட்சிகள்
இதுபற்றி சீமான் கூறிகையில், ‛‛நிலத்தையும், நீரையும், காற்றையும் நஞ்சாக்கக் கூடிய நச்சு ஆலைகள் நம் மண்ணில் இருக்கக்கூடாது என்கிற உயர்ந்த நோக்கத்தோடு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இது எழுச்சி வடிவமாக உருப்பெற்று கலெ க்டரை சந்தித்து மனு அளிக்க சென்றவர்கள் துப்பாக்கிச்சூட்டில் பலியாகி உள்ளனர். இது திட்டமிட்ட ஒரு படுகொலை. இதற்கு யார் உத்தரவிட்டது. அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டால் துப்பாக்கிச் சூடு குறித்து எனக்கே தெரியாது என தெரிவித்தார். திராவிட கட்சிகள் ஏமாற்றுகின்றன. தொடர்ச்சியாக இது போன்ற நச்சுத் திட்டங்களைத் தமிழகத்தில் நிறுவி நிறுவி, வாழ்வதற்கு வழி இல்லாத நிலமாக எங்கள் நாட்டினை மாற்றிக் கொண்டிருப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். அதற்கு எதிராகக் கடும் போராட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம் என்கிற உறுதியை இந்த நாளில் உயிரிழந்த ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களுக்கு அஞ்சலி செலுத்தி எடுக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
English summary
TTV Dhinakaran says, blocking the reopening of the Sterlite plant in Thoothukudi would be a real tribute to those who lost their lives in the struggle. And Nam Tamilar Party also paid homage under seeman to those who died in the police firing.