Delhi
oi-Noorul Ahamed Jahaber Ali
டெல்லி: உலகம் முழுவதும் குரங்கு அம்மை காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்தியாவில் நோய் பரவலை தடுக்க விமான நிலையங்கள், முக்கிய துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு நோய் பரிசோதனை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் நூற்றுக்கணக்கானோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது.
இது அடுத்தடுத்த நாடுகளுக்கும் வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் நடத்திய பரிசோதனையில் இந்தியாவில் சிலருக்கு இந்த நோய் பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஓரினச் சேர்க்கையால் பரவும் குரங்கு காய்ச்சல்?அறிகுறிகள் என்ன? செய்ய வேண்டியவை, கூடாதவை என்னென்ன?

சுகாதாரத்துறை உத்தரவு
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளிடம் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விமான நிலையங்கள், துறைமுகங்கள், சர்வதேச சாலை எல்லை வழியாக இந்தியா வருபவர்களிடம் குரங்கு அம்மை நோய் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்
இது தொடர்பாக விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. குரங்கு அம்மை தொடர்பாக இந்திய அரசு வழங்கிய முதல் வழிகாட்டு நெறி இதுதான். குறிப்பாக ஆப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது. பரிசோதிக்கப்படும் மாதிரிகளை எங்கு சோதனைக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாதிப்பில்லை
இது முழுக்க முழுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்றும், அபாயங்களை உணர வைப்பதற்காக இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை நோயால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், பிற நாடுகள் இந்த பாதிப்புகள் கண்டறியப்பட்ட உடனே அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா இறங்கிவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அறிகுறிகள்
மன் கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய் வன விலங்குகளை தாக்கக்கூடியவை. அபூர்வமாக மனிதர்களுக்கும் அந்த நோய் பரவும். இந்த நோய் மனிதரை தாக்கினால் 2 முதல் 4 வாரங்களுக்கு உடல்நல குறைபாடு ஏற்படும். காய்ச்சல், தடித்த உடல் புண்கள் போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
English summary
Indian health ministry adviced to screen foreign arrivals for monkeypox signs: உலகம் முழுவதும் குரங்கு அம்மை காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்தியாவில் நோய் பரவலை தடுக்க விமான நிலையங்கள், முக்கிய துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு நோய் பரிசோதனை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Story first published: Saturday, May 21, 2022, 0:10 [IST]