Chennai
oi-Jeyalakshmi C
சென்னை: இளமை காலம் முழுவதையும் சிறையில் கடந்துள்ளார் பேரறிவாளன். 31 ஆண்டுகால சிறைவாசத்தில் இருந்து பேரறிவாளனை விடுவித்துள்ளது உச்சநீதிமன்றம். தனது விடுதலையை குடும்பத்தினருடன் கொண்டாடிய பேரறிவாளன், பறையிசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகாலம் சிறையில் இருந்தார் பேரறிவாளன். தூக்கு தண்டனை பெற்று நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இன்றைக்கு விடுதலை அடைந்துள்ளார். சட்டப்பிரிவு 142 பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

161 ஆவது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தியது உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வழிவகுக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது . ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசியலமைப்பு சட்டப்படி தவறு. முழுமையாக ஆராய்ந்து பேரறிவாளனை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் மகனின் விடுதலைக்காக நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிய ஒரு தாயின் பாசப்போராட்டம் வென்றுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன், “அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும் என்று ருக்குறளை மேற்கோள் காட்டி, நல்லவர்கள் வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதி என்றார்.
எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல. உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது. இந்த நீதியமைப்பு முறையில் திறம்பட சட்டப் போராட்டத்தை நிகழ்த்தினால் நாம் எதோ ஒரு கட்டத்தில் வெற்றியடைய முடியும்.
ஒரு சாமானியன் இது போன்ற வழக்கில் உள்ளே மாட்டிக்கொண்டால் அது மிகப் பெரிய துன்பமான சட்டப் போராட்டமாக இருக்கும் என்பதற்கு நான்தான் எடுத்துக்காட்டு. 30 ஆண்டு காலம் என்னுடன் இருந்த அத்தனை தமிழர்களுக்கும் நன்றி. என் தாய் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எனக்காகவே அர்ப்பணித்துள்ளார். தங்கை செங்கொடியின் உயிர் தியாகம் அளப்பரியது.
பெற்றோருக்கு வயது அதிகமாகும் நிலையில், அவர்களது வாழ்க்கையை திருடுகிறோமோ என்று எண்ணினேன். தாய் தந்தை உயிரோடு இருக்கும்போதே எனது விடுதலையை பார்க்க வேண்டும் என்று கருதினேன் என்று கூறினார். இப்போதுதான் சுதந்திர காற்றை சுவாசித்திருக்கிறேன். அனைவருக்கும் நேரடியாக நன்றி கூறுவேன் என்று தெரிவித்தார்.
பேரறிவாளன் விடுதலை பெற்றதால் அவரது குடும்பம் மட்டுமல்ல அவரது விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். கொண்டாட்டங்களால் ஜோலார்பேட்டை இல்லம் களைகட்டியுள்ளது. அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பேரறிவாளன்.
பறையிசைக்கலைஞர்கள் பலரும் பறை மேளம் இசைத்து கொண்டாடினர். அப்போது பேரறிவாளன் பறையிசைத்தார். கைதேர்ந்த கலைஞரைப்போல பறையிசைத்து தனது விடுதலைக்கான மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சகோதரி மகளின் திருமணத்தின் போது வரவேற்பு நிகழ்ச்சியில் பேரறிவாளன் பறை மேளம் இசைத்த வீடியோக்கள் அனைவராலும் பகிரப்பட்டது. இன்றைய தினம் தனது விடுதலையை மகிழ்ச்சியோடு பறையிசைத்து கொண்டாடியுள்ளார் பேரறிவாளன்.
English summary
Perarivalan has spent his entire youth in prison. The Supreme Court has released Perarivalan from 31 years in prison. Perarivalan, who celebrated his release with his family, expressed his happiness by Parai isai
Story first published: Wednesday, May 18, 2022, 13:40 [IST]