Trichirappalli
oi-Rajkumar R
திருச்சி : திருச்சியில் வாழைப்பழம் வாங்கி தராததால் ஏற்பட்ட தகராறில் குடிபோதையில் இருந்த கணவனை நெஞ்சில் கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவியை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
திருச்சி சுப்பிரமணியபுரம் பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவருடைய மகன் தினேஷ்ராஜசேகரன். இவர் தென்னூர் பட்டாபிராமன் சாலையில் உளள இருசக்கர வாகன ஷோரூமில் கலெக்ஷன் ஏஜெண்டாக வேலை செய்து வந்தார்.
இவருடைய மனைவி லாவண்யா(26). இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து கடந்த
4ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

குடிபோதையில் தகராறு
தற்போது இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படும் போதெல்லாம் தினேஷ்ராஜசேகரன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி மனைவியை அடிக்கடி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

வாழைப்பழ சண்டை
நேற்று இரவு தனது குழந்தைக்கு வாழைப்பழம் வாங்கி வரும்படி தினேஷ்ராஜசேகரனிடம், லாவண்யா கூறியுள்ளார். ஆனால் தினேஷ்ராஜசேகரன் வாழைப்பழம் வாங்காமல் குடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தி அடைந்த தினேஷ்ராஜசேகரன் சமையல் அறைக்குள் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து தற்கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

கணவன் கொலை
இதையடுத்து தனது கணவரிடம் இருந்து லாவண்யா கத்தியை பறிக்க முயன்றுள்ளார். ஆனால் லாவண்யா கத்தியை பறித்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக கணவரின் நெஞ்சில் வேகமாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்தவெள்ளத்தில் தினேஷ்ராஜசேகரன் மயங்கி விழுந்தார். இதைக்கண்ட லாவண்யா அலறவே அவர் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி கைது
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து லாவண்யாவை கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English summary
Police have arrested a woman who stabbed her drunken husband to death in a dispute over not buying bananas in Trichy
Story first published: Monday, May 23, 2022, 12:25 [IST]