Chennai
oi-Rajkumar R
சென்னை : மக்கள் நலனை கருதி பெட்ரோல் – டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அரசின் வரி குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சமான்ய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவந்தனர். இந்நிலையில் கடந்த 40 நாட்களாக விலையில் எந்தவித மாற்றமுமின்றி இருந்தது. இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி ரூ.6ம் குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலையை நீங்க உயர்த்திவிட்டு.. எங்களை குறைக்க சொல்வது நியாயமா? நிர்மலாவிற்கு பிடிஆர் பதிலடி

ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
இந்த விலை குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இதனை வரவேற்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” உலக அளவில் பணவீக்கம் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழ்நிலையில், விஷம் போல் விலைவாசி உயர்ந்து வருகின்ற இந்தத் தருணத்தில், ஏழை, எளிய, நடுத்தர மக்களை காக்கும் பொருட்டு, பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு எட்டு ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ஆறு ரூபாயும் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

மீண்டும் மானியம்
இது மட்டுமல்லாமல், ‘உஜ்வாலா’ திட்டத்தின்கீழ் ஏழைப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிவாயு இணைப்புகளுக்கு, ஆண்டுக்கு 12 உருளைகளுக்கு, தலா 200 ரூபாய் மானியம், பிளாஸ்டிக், நிலக்கரி, இரும்பு மற்றும் உருக்கு மீதான வரி குறைப்பு, கூடுதல் உர மானியம், சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்.

வாட் வரி குறைப்பு
மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம், ஒவ்வொரு மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரிக்கேற்ப, பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 காசு அளவுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் அளவுக்கும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் இறங்கவும், ஆட்டோ, டாக்சி போன்ற வாகனங்களுக்கான கட்டணங்கள் குறையவும் வழி வகுக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், பணவீக்கம் குறையவும் வாய்ப்பு ஏற்படும்.

அரசுக்கு கோரிக்கை
மத்திய அரசின் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைத்துள்ளன. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில், பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு மேலும் இரண்டு ரூபாய் குறைக்கவும், டீசல் மீதான வரியை நான்கு ரூபாய் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. இவ்வாறு குறைக்கப்படுவதன் மூலம் தற்போது 110 ரூபாய் 85 காசுக்கு விற்பனை செய்யப்படும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 ரூபாய் 50 காசுகள் குறைந்து 100 ரூபாய்க்கு கீழ் அதாவது 99 ரூபாய் 35 காசுக்கு விற்பனை செய்யும் நிலை உருவாகும். இதேபோன்று, லிட்டருக்கு 100 ரூபாய் 94 காசுக்கு விற்பனை செய்யப்படும் டீசல் விலை 11 ரூபாய் குறைந்து 89 ரூபாய் 94 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும் நிலை உருவாகும்.

தமிழ்நாடு அரசு
இது, பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் செல்வோர் செலுத்தும் வாகனக் கட்டணங்கள் மேலும் குறையவும், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பு வெகுவாகக் குறையுவும், அரசுப் பேருந்துக் கட்டணங்கள் உயரப் போகிறது என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வழிவகுக்கும். ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக தக்காளி, பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலையும் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படும் தருணத்தில், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலன்களைக் காக்கும் பொருட்டு தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு.

இதுவும் ‘திராவிட மாடல்’
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், பணவீக்கத்தைக் குறைக்கும் வகையிலும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இழப்பீட்டைக் குறைக்கும் வகையிலும், தேர்தல் வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையிலும், குறைந்தபட்சம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்க நடவடிக்கை எடுத்து ‘மக்களுக்கு நீதி’ வழங்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதுவும் ‘திராவிட மாடல்’ போலும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும்!
English summary
AIADMK co-ordinator O. Panneerselvam has urged the Tamil Nadu government to reduce VAT on petrol and diesel in the interest of the people and welcomed the central government’s announcement of tax cuts.
Story first published: Sunday, May 22, 2022, 12:36 [IST]