Chennai
oi-Noorul Ahamed Jahaber Ali
சென்னை: பிரதமர் மோடியை வரவேற்க காத்திருந்த பாஜக பிரமுகர் ஒருவர் செய்தி சேகரிப்பதற்காக நின்ற பெண் பத்திரிகையாளரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி ரூ.31,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு விலக்கு, கச்சத்தீவு மீட்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மேடையிலேயே பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.
”பாரத் மாதா கி ஜே.. வந்தே மாதரம்” – 3 முறை முழங்கிவிட்டு சென்னையில் உரையை நிறைவு செய்த மோடி
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளன. சுமார் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

பிரதமர் மோடி வருகை
சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் அடையாறு சென்றடைந்தார். அங்கு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார்.

பாஜக உற்சாக வரவேற்பு
பிரதமர் மோடியை வரவேற்க சுமார் 5 ஆயிரம் பாஜக தொண்டர்கள் சாலையோரங்களில் திரண்டு நின்றனர். அவர்களுடன் பிரதமர் மோடிக்கு காவி மயமான வரவேற்பு அளிக்க காவி உடைகள் அணிந்த கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை செய்தி சேகரிப்பதற்காக ஏராளமான பத்திரிகையாளர்களும் ஆங்காங்கே திரண்டிருந்தனர்.

பெண் பத்திரிகையாரிடம் சீண்டல்
சுவாமி சிவானந்த சாலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்வு குறித்து பத்திரிகையாளர்கள் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த பாஜகவை சேர்ந்த பிரமுகர் பெண் செய்தியாளரிடம் தவறாக நடந்துகொண்டதாக சக பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததுடன் அவர் கையில் வைத்திருந்த மைக்கை பிடுங்கி தகாத முறையில் நடந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம்
அந்த பாஜக பிரமுகரின் பெயர் என்னவென்று தெரியவில்லை எனக் கூறும் பத்திரிகையாளர்கள், அவரது புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு இருக்கின்றனர். பாஜக பிரமுகரின் இச்செயலுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது, “பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையை செய்தி சேகரிக்கச் சென்ற பெண் செய்தியாளரிடம் படத்தில் உள்ள பாஜக பிரமுகர் கீழ்த்தரமாக நடந்துள்ளார். தமிழ்நாடு பாஜக இவர் யார் என்று சொல்ல மறுக்கிறது. மாநிலத் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து பதிலளிக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டு உள்ளது.
English summary
CMPC complaint against BJP workers who harrashed female reporter in Modi welcome event: பிரதமர் மோடியை வரவேற்க காத்திருந்த பாஜக பிரமுகர் ஒருவர் செய்தி சேகரிப்பதற்காக நின்ற பெண் பத்திரிகையாளரிடம் தகாத முறையில் பேசியதற்காக பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Story first published: Friday, May 27, 2022, 0:32 [IST]