Tuticorin
oi-Noorul Ahamed Jahaber Ali
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே 100 வயதுடைய பிச்சலிங்கம் என்ற முதியவர் வயதை பொருட்படுத்தாமல் தனியாக டீக்கடை நடத்தி வருகிறார்.
கவனித்துக்கொள்ள குடும்பம், தேவைக்கு ஏற்ற பொருளாதாரம் இருந்தும் உழைப்பின் மீதான காதலால் இந்த தள்ளாத வயதிலும் தாமாக உழைத்து சம்பாதித்து வருகிறார் பிச்சலிங்கம்.
இந்த ஏரியாவிலேயே பிச்சலிங்கம் போடும் தேனீரும், பக்கோடாவும்தான் புகழ்பெற்றது என்பதால் பலரும் தேடி வந்து சாப்பிட்டு செல்கின்றனர்.
இலங்கையில் பெருகும் கும்பல் வன்முறைகள்.. பெட்ரோல் இல்லாததால் பங்க் உரிமையாளர் வீட்டுக்கு தீ வைப்பு

பேஸ்புக் பதிவு
இதுகுறித்து முகமது ஹுசைன் என்ற நபர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “தூத்துக்குடி to ஏரலுக்கு இடையே இருவப்பபுரம் என்கிற இயற்கை எழில் சூழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க அற்புதமான கிராமம். சாலையோரத்தில் ஒரு புறம் வாழை மரங்களும் பனைமரங்களும் பெரிய பெரிய மரங்களும் மறுபுறத்தில் அற்புதமான மிக நீண்ட நெடிய நீரோடை போன்றதொரு குளம் (பெயர் தான் சரியில்லை )
பேய்குளமாம்.

ஒற்றை பல் தாத்தாவின் டீக்கடை
சிறிய மூன்று சாலை சந்திப்பில் வாழைத்தார் ஏலம் விடப்படுவதையும், பலாப்பழ குவியல்களாக விற்பனை செய்யப்படுவதையும் கண்டேன். அருகில் ஒரு தேநீர் விடுதி.. என்னோடு வந்திருந்தவர் சொன்னார் அந்த கடையில் பக்கோடா சுவையாக இருக்கும் என்று. கடையின் உரிமையாளர் முதியவர் பிச்சலிங்கம். ஒற்றை பல் தெரிய புன்னகை முகத்தோடு வரவேற்றார்.

உழைப்பே உயர்வு
சூடாக ஒரு தேனீர் அருந்திவிட்டு கால் கிலோ பக்கோடா வாங்கிவிட்டு, இந்த தள்ளாத வயதில் உழைப்பதற்கு காரணம் என்ன? வறுமையாக இருக்குமோ? என்று எண்ணியவாறே ஆர்வத்துடன் பேச்சுக் கொடுத்தேன். ஆனால் அவர் பேசிய வார்த்தைகளிலிருந்து நான் எண்ணியது போல் அவர் வறுமையில் இல்லை என்று புரிந்து கொண்டேன். பாரம்பரியமிக்க குடும்பம் வாரிசுகள், பேரப்பிள்ளைகள், தோட்டம் என்று செழிப்பான குடும்ப பின்னணி இருந்தாலும் அவர் தன்னுடைய உழைப்பை மட்டும் ஒருபோதும் கைவிடவில்லை.

100 வயது
பேசாமலேயே சில மனிதர்கள் தங்களுடைய செயல்களின் மூலம் பலரை உற்சாகப்படுத்துகிறார்கள்,வாழ்க்கையை சிந்திக்க வைக்கிறார்கள், தன்னம்பிக்கை தருகிறார்கள். இப்படி ஒரு மனிதரை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி. 100 வயதை தொட்ட (1922 to 2022) அந்த உழைக்கும் மாமனிதருக்கு என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு அவரோடு ஒரு செல்பி எடுத்துக் கொண்டேன் அவர் அனுமதியோடு.” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
English summary
100 year old man run tea shop and selling tastu pakodas in Tuticorin
Story first published: Monday, May 23, 2022, 0:05 [IST]