“மக்களின் நண்பர்கள்”
எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் சமூக-ஜனநாயகவதிகளை எதிர்த்துப் போரிடுவது எப்படி? – வி.இ.
லெனின்

 

(”ரூஸ்கயே பகாத்ஸ்த்வோவில்”1
மார்க்சியவாதிகளை எதிர்த்து வெளியான கட்டுரைகளுக்குப் பதில்) என்னும் புத்தகத்திலிருந்து

 

இங்கே மிகவும் குறிப்பிடத்தக்கது
என்னவென்றால், நமது அகவயத் தத்துவஞானியானவர் வெறும் சொற்றொடர்களிலிருந்து ஸ்தூலமான
விவரங்களுக்கு வருவதற்கு முயற்சி செய்த உடனேயே ஒரு குளறுபடியில் சிக்கிக் கொண்டார்
என்பதேயாகும்.2 மேலும் அவ்வளவு
சுத்தமில்லாத இந்த நிலையில் இந்த இடத்தில் தான் மிகவும் சுகமாக இருப்பதாக அவர் நினைப்பது
வெளிப்படையாகத் தெரிகிறது. அவர் தமது இறக்கைகளைக் கோதி அழகுபடுத்திக் கொண்டு, தன்னைச்
சுற்றிலும் சேற்றை வாரியடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.  உதாரணமாக, வரலாறு என்பது வர்க்கப் போராட்ட நிகழ்ச்சிகளின்
தொடர்வரிசையே என்ற கருத்துரையை மறுப்பதற்கு அவர் விரும்புகிறார். எனவே மிகவும் ஆழமான
ஒரு தோரணையோடு இது “தீவிரமானது” என்று அறிவிக்கிறார்.  “மார்க்சினால் ஆரம்பிக்கப்பட்ட, வர்க்கப் போராட்ட
நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட சர்வதேசத் தொழிலாளர் சங்கம்3 பிரெஞ்சு, ஜெர்மன்
தொழிலாளர்கள் ஒருவரையொருவர்  கழுத்தை வெட்டுவதையும்
கொள்ளையடிப்பதையு தடுக்கவில்லை” என்று கூறிய பிறகு பொருள்முதல்வாதம் “தேசிய அகந்தை,
தேசியப் பகைமை என்ற பேயோடு” கணக்குத் தீர்க்க முடியவில்லை என்பதை இது நிரூபிக்கிறது
என்று வற்புறுத்துகிறார்.  ஆனால் வர்த்தக, தொழில்
பூர்ஷுவாக்களின் மிகவும் உண்மையான நலன்களே இந்தப் பகைமைக்கு முக்கியமான அடிப்படை; தேசிய
உணர்ச்சி ஒரு சுதந்திரமான காரணி என்பது போலப் பேசுவது பிரச்சினையின் சாராம்சத்தை மறைப்பதற்கு
மட்டுமே உதவும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு இந்த விமர்சகர் முற்றிலும் தவறி விட்டார்
என்பதையே இந்த வற்புறுத்தல் வெளிப்படுத்துகிறது. ஆனால் தேசிய இனத்தைப் பற்றி நமது தத்துவஞானியார்
எவ்வளவு ஆழமான புலைமை கொண்டிருக்கிறார் என்பதை நாம் முன்னரே பார்த்து விட்டோம்.

 

அகிலத்தைப் பற்றிக்
குறிப்பிடும் போது ஒரு புரேனினுடைய கிண்டல் இல்லாமல் திரு. மிகய்லோவ்ஸ்கியால் குறிப்பிட
முடியாது “சர்வதேசத் தொழிலாளர் சங்கத்துக்கு மார்க்ஸ் தலைவராக இருந்தாலும் அது சின்னா
பின்னமடைந்து விட்டதும் உண்மையே;  ஆனால் இப்பொழுது
அதற்குப் புத்துயிர் கொடுக்கப் போகிறார்கள்” என்று எழுதுகிறார்.  ரூஸ்கேயே பகாத்ஸ்த்வோவின் இரண்டாவது இதழில் வழக்கமாக
உள்நாட்டு விவகாரங்களைப் பற்றி எழுதி வரும் கட்டுரையாளர் சர்வதேச ஒருமைப்பாட்டின்
nec plus ultraவை* ஒரு “நியாயமான” பரிவர்த்தனை என்ற அமைப்பாகக் கண்டு பிலிஸ்தினிய அற்பத்
தனத்தோடு விளக்கம் கொடுத்திருக்கிறார்; பரிவர்த்தனை என்பது – நியாயமானதோ அல்லது அநியாயமானதோ
– பூர்ஷுவாக்களின் ஆட்சியை முன்னூகிப்பதோடு அதை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது.

 

பரிவர்த்தனையை அடிப்படையாகக்
கொண்ட பொருளாதார அமைப்பு ஒழிக்கப்பட்டாலொழிய சர்வதேச மோதல்களைத் தடுக்க முடியாது என்பதைப்
புரிந்து கொள்ள முடியாவிட்டால், அகிலத்தைப் பற்றி ஏளனம் செய்வது புரிந்து கொள்ளக் கூடியதே.
தேசிய பகைமையை எதிர்த்துப் போராட வேண்டுமென்றால் ஒடுக்கும் வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு
ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை தனித்தனியாக ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றுபடுத்தி, ஸ்தாபன ரீதியாக
திரட்டி பிறகு அத்தகைய தேசிய அளவிலுள்ள தொழிலாளி வர்க்க ஸ்தாபனங்களைச் சர்வதேச மூலதனத்தை
எதிர்த்துப் போராடக் கூடிய சர்வதேசத் தொழிலாளி வர்க்கத்தின் தனியொரு படையாக ஒன்றுபடுத்துவதைத்
தவிர வேறு வழியில்லை என்ற சாதாரண உண்மையை திரு. மிகய்ஸோவ்ஸ்கியின் மூளை வாங்கிக் கொள்ள
முடியவில்லை என்பதை ஒருவர் புரிந்துகொள்ள முடிகிறது.

தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர்
தம்முடைய கழுத்துகளை வெட்டிக் கொள்வதை அகிலம் தடுக்கவில்லை என்ற கூற்றைப் பொருத்தவரை,
திரு. மிகய்லோவ்ஸ்கியிடம் கம்யூன் நிகழ்ச்சிகளை4 – யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும்
ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின்
உண்மையான நிலையை அவை எடுத்துக் காட்டுகின்றன – நினைவுபடுத்துவதே போதுமானதாகும்.

திரு. மிகய்லோவ்ஸ்கி
நடத்துகின்ற விவாதத்தில் குறிப்பிடத்தக்க வகையில் அருவருப்பைத் தருவது அவர் பயன்படுத்துகின்ற
முறைகளேயாம்.  அகிலம் பின்பற்றுகின்ற செயல்தந்திரத்தில்
அவருக்கு அதிருப்தி ஏற்பட்டால், எந்த லட்சியங்களின் பெயரால் ஐரோப்பியத் தொழிலாளர்கள்
ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்படுகின்றார்களோ, அவற்றில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்றால்,
அவர் குறைந்தபட்சம் பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் அவற்றை விமர்சிக்க வேண்டும்; சரியான
கருத்துகள் எவை, இன்னும் திறமையான போர்த்தந்திரம் எது என்பதைப் பற்றிய தம்முடைய கருத்தை
விளக்க வேண்டும்.  அவர் தெளிவான, திட்டவட்டமான
ஆட்சேபங்களைச் சொல்வது இல்லை;  அதற்குப் பதிலாக,
சொற்கூளங்களுக்கு நடுவே இங்குமங்கும் அறிவில்லாத ஏளனச் சொற்கள் சிதறிக் கிடப்பதை மட்டுமே
பார்க்கிறோம். இதைக் குப்பை கூளம் என்று கூறுவதைத் தவிர – அதிலும் ருஷ்யாவில் அகிலத்தின்
கருத்துகளையும் போர்த்தந்திரங்களையும் ஆதரிப்பது சட்ட பூர்வமாக அனுமதிக்கப்படவில்லை
என்ற நிலையில் – வேறு என்ன சொல்ல முடியும்?

       
வி.இ.
லெனின். பக். 13-15, பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் (நூல் திரட்டு தொகுதி 1, பக்.
154-156)  

1894 வசந்த காலம் –
கோடை கால்த்தில் எழுதப்பட்டது    


Previous article2023 மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி எதிர்பார்ப்புகள்..,
Next articleArtificial Intelligence Traffic Signal தேவை