சென்னை: சென்னையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் பாலச்சந்திரன், 3 ஆண்டுகள் முன்பு வரை போலீசாரின் ரவுடி பட்டியலில் இருந்தவர்; 6 ஆண்டுகளுக்கு முன்னர் மாட்டு தலையை வெட்டி பிற மதத்தினர் மீது பழி போட்டு மத கலவரத்தை தூண்ட முயற்சி செய்து பிடிபட்டவர்; போலீஸ் பாதுகாப்புக்காக தம்மை பிற மதத்தினர் தாக்கிவிட்டதாக 2 முறை நாடகமாடியவர் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். தமிழக பாஜகவின் மத்திய சென்னை மாவட்ட எஸ்.சி/எஸ்.டி. பிரிவு தலைவராக இருந்து வந்தார். சென்னை சிந்தாதரிப்பேட்டையில் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் பாலச்சந்தர். இது முன்விரோதம் காரணமாக நடைபெற்ற படுகொலை என சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். இப்படுகொலை தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.