Chennai
oi-Vishnupriya R
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது என நளினியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டனர்.
இந்த ஆயுள் சிறை தண்டனை முடிவடைந்தும் அவர்கள் விடுவிக்கப்படாமல் சிறையிலேயே இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
ரத்தம் வடியும் பேரறிவாளனின் திறந்த மடல்: ராஜீவ் கொலை வழக்கில் சிபிஐ கஸ்டடியில் எத்தனை சித்ரவதைகள்?

விசாரணைகள்
அந்த வழக்கு மீது பல கட்ட விசாரணைகள் நடந்து முடிந்த நிலையில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் பேரறிவாளனை விடுதலை செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதுகுறித்து தமிழகமே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து நளினியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் இந்த தீர்ப்பு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

அதிமுக ஆட்சி
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தினார்.

ஆளுநரின் இசைவு
நீண்ட காலத்திற்கு பிறகு அதாவது ஜனவரி 27ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு ஆளுநருக்கு தீர்மானத்தை அனுப்பி வைத்தார். அது போல் ஆளுநரின் இசைவிற்காக காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. பேரறிவாளன் தனது விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தை நாடிய போது 142 ஆவது சட்டவிதிபடி தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவர் விடுதலை செய்யப்பட்டார்.

உச்சநீதிமன்றம்
1980 ஆம் ஆண்டு மரு ராமு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டே சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தோம். அந்த தீர்ப்பில் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். கோப்புகளில் ஆளுநருடைய கையெழுத்துகளை பெறுவது அரசியலமைப்புக்கான மரியாதைக்காக மட்டுமே என்றும் நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

72 விதி
சட்டவிதி எண் 72 இன் கீழ் குடியரசுத் தலைவரோ அல்லது 161 ஆவது பிரிவின் கீழ் ஆளுநரோ கருணை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அமைச்சரவையின் ஆலோசனையின்றி ஒரு தலைபட்சமாக முடிவுகளை எடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே பேரறிவாளன் வழக்கிலும் இந்த நிலைப்பாட்டையே எதிர்பார்த்தோம்.

நாங்கள் எதிர்பார்த்தது வேறு
சட்டப்பிரிவு 142 இன் கீழ் பேரறிவாளனை போல் மற்ற 6 பேரும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம், சட்டப்பிரிவு 226 ஐ பயன்படுத்தி அத்தகைய விடுதலைக்கு உத்தரவிடலாம் என உயர்நீதிமன்றத்தை அந்த 6 பேரும் சமாதானப்படுத்துவது கடினமாகிவிடும். எனவே இன்றைய தினம் பேரறிவாளன் வழக்கில் நாங்கள் என்ன எதிர்பார்த்தோம் என்றால், 161 சட்டபிரிவின் கீழ் மாநில அமைச்சரவை குறிப்பிட்ட கைதிகளை விடுதலை செய்ய கோரி பரிந்துரைத்தால் அதன் மீது முடிவெடுக்க ஒரு சட்டத்தையோ கால அளவையோ உச்சநீதிமன்றம் வரையறுக்கும் என எதிர்பார்த்தோம். இது போன்ற சட்டங்கள், விதிகளால் மட்டுமே அமைச்சரவை பரிந்துரைகளை நீண்ட காலமாக ஆளுநரால் நிலுவையில் வைத்திருக்க முடியாது என்றார் ராதாகிருஷ்ணன்.
English summary
Nalini’s Advocate Radhakrishnan says that big disappointment that the SC release Perarivalan.