Chennai
oi-Noorul Ahamed Jahaber Ali
சென்னை: பேரறிவாளனை தூக்கில் போட வேண்டும் என்றும், சட்டம் தெரியாத கே.டி.தாமஸ் எல்லாம் நீதிபதியா எனவும் காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணன் காட்டமாக பேசியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறி 1991 ஆம் ஆண்டு கைதானார் பேரறிவாளன்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
பயங்கரவாதத்துக்கு கிடைத்த வெற்றி.. பேரறிவாளன் விடுதலையை விமர்சித்த காங். பிரமுகர் அமெரிக்கை நாராயணன்

ஆளுநர்
பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். தொடர்ந்து பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கடந்த மார்ச் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த நிலையில் தன்னை விடுதலை செய்திடக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஏன் நீதிமன்றமே விடுவிக்கக்கூடாது?
அப்போது “தன்னை விடுதலை செய்யக்கோரி அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகும் கூட ஆளுநர் எந்த விதமான முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்.” என பேரறிவாளன் தரப்பு தெரிவித்தது. இதைக்கேட்ட நீதிபதிகள், “விடுதலை தொடர்பாக குழப்பம் நீடித்து வருகின்றன். ஏன் பேரறிவாளவனை நீதிமன்றமே விடுவிக்கக்கூடாது. பேரறிவாளனை விடுவிப்பதுதான் ஒரே தீர்வு” என்று தெரிவித்தனர்.

பேரறிவாளன் விடுதலை
இந்த நிலையில் இவ்வழக்கை கடந்த செவ்வாய்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றம் இது போன்ற தீர்ப்பை வழங்குவது மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கருத்து
இதுகுறித்து திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தது. நேற்று தமிழ்நாடு முழுவதும் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து வாயில் வெள்ளை துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அப்போது பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக அக்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

அமெரிக்கை நாராயணன்
இதுகுறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணன், “குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட தமிழர்கள் பெயர்கள் யாருக்கும் தெரியாது. பேரறிவாளனின் பெயர் தெரியும். வெட்கப்பட வேண்டும். இவர்களை பற்றி எத்தனை பேர் பேசியுள்ளீர்கள். உயிர்போன தமிழர்களை பற்றி பேசுங்கள். கொலைகாரனை பற்றி பேசுகிறீர்கள். சட்டம் தெரியாத கே.டி.தாமஸை போய் நீதிபதி என்று சொல்கிறீர்களே! பேரறிவாளன் தூக்கில்போன வேண்டும்.” என்றார்.
English summary
Perarivalan should be Hanged – Congress Americai Narayanan: : பேரறிவாளன் விடுதலை என்பது பணநாயகத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் கிடைத்த வெற்றி என காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணன் தெரிவித்துள்ள சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Story first published: Friday, May 20, 2022, 22:50 [IST]