News
oi-Noorul Ahamed Jahaber Ali
மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசின் அனுமதியை தொடர்ந்து தருமபுர ஆதீனத்தின் பட்டிணப் பிரவேச திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தொடங்கியுள்ளது.
தருமபுர ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் ஆதீனத்தை பல்லக்கில் ஏற்றி சுமந்து செல்வது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பாக தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததற்கு பாஜக, இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
முதுமைக்கு டாட்டா சொல்லும் தாத்தா.. 100 வயதிலும் டீ, பக்கோடா விற்கும் ஸ்ரீவைகுண்டம் பிச்சலிங்கம்

தருமபுர ஆதீனம்
பழமையான சைவ ஆதீனமாக விளங்கும் தருமபுரம் ஆதீனத்தின் ஆதீனகர்த்தராக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அவரை தொடர்ந்து ஆதீனத்தின் 27 வது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்றார்.

ஜீயரை சுமக்கும் அடித்தட்டு மக்கள்
பதவியேற்ற நாளிலேயே தருமபுரத்தில் ஆதீனத்தை அடித்தட்டு மக்கள் பல்லக்கில் சுமந்து செல்லும் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்த திராவிடர் கழகம், “தருமபுர மடத்துக்குப் புதிய ஆதீனகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்ட – மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் என்னும் மனித உரிமையைச் சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியைப் புதுப்பித்து வருகிறார்.” என்று கண்டனம் தெரிவித்து இருந்தது.

மீண்டும் பட்டினப்பிரவேசம்
இந்த நிலையில், மீண்டும் தருமபுர ஆதீனம் ஏற்பாடு செய்திருந்த பட்டிணப் பிரவேச நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியர் தடை விதித்ததற்கு இந்து அமைப்பினரும், பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. கோட்டாட்சியரின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவை, தமிழ்நாடு கோயில்கள் மற்றும் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை ஆகிய அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழக அரசு அனுமதி
இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பட்டிணப் பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி தர வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இதை வைத்து சிலர் அரசியல் செய்ய முயல்வதாகவும், நீதிமன்றத்துக்கு இது கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு பட்டிணப் பிரவேசத்துக்கு அனுமதி வழங்கியது.

குருபூஜை
இதனை தொடர்ந்து கடந்த 12-ந் தேதி தருமபுர ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருபூஜை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் ஒரு பகுதியாக நேற்று நாற்காலி பல்லக்கு பிரவேசம் நடைபெற்றது. ஆதீனத்தில் சொக்கநாதர் சந்நிதியில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு பூஜைகள் நடத்தினார். பின்னர் கட்டளைத் தம்பிரான்கள் புடைசூழ நாற்காலி பல்லக்கில் ஆதீனகர்த்தர் வலம் வந்தார். பின்னர் சிறப்புவழிபாடு நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பட்டிணப் பிரவேசம்
இதையடுத்து இன்று வீடியோ ஒன்றை வெளியிட்ட தருமபுர ஆதீனம், “இது ஒரு ஆன்மீக நிகழ்வு; இதனை அரசியல் ஆக்காமல் கொண்டு செல்வதற்கு ஆதீனம் பாதை வகுத்துள்ளது. திரளான பக்தர்கள் சிவனடியார்கள் இவ்விழாவில் பங்கேற்க வேண்டும்; இந்த நிகழ்வை முன்னிட்டு 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் இன்று செயல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.” இதனைத் தொடர்ந்து இரவு குருபூஜை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பட்டிணப்பிரவேசம் நடைபெற்றது. அப்போது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் சம்பந்த பரமாச்சாரியார் சிவிகை பல்லக்கில் ஏற்றி வீதி உலாவாக அழைத்துச் செல்லப்பட்டார்.

பாஜக
இந்த விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் முன் வரிசையில் நின்றனர். பட்டிணப் பிரவதேச தடைக்கு எதிராக கடுமையான கண்டனக்குரல்களை பாஜக எழுப்பி வந்தது. இன்று நடைபெற்ற பட்டிணப் பிரவேசத்தில் பாஜகவினர் பெருமளவில் பங்கேற்ஜ வேண்டும் என ஆழைப்பு விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து அக்கட்சி தொண்டர்கள் இதில் திரளாக பங்கெடுத்துள்ளனர்.
English summary
Dharmapura Aadheenam Pattina pravesham festival started in Mayiladudurai
Story first published: Monday, May 23, 2022, 0:30 [IST]