பயனில்லை என்றால் கூறாதீர்கள்

சில விஷயங்களைச் சம்பந்தப்பட்டவரிடம் கூறுவது எவ்வளவு அவசியமோ அதே போலக் கூறாமல் இருப்பது. நாம் கூறுவது மற்றவருக்குப் பயனில்லை ஆனால், மன உளைச்சல் என்றால் கூறாதீர்கள். Image Credit

தகவல்கள்

தினமும் பல்வேறு சம்பவங்களை, செய்திகளைக் கடந்து வருகிறோம்.

அவை நேரடியாகப் பார்த்ததாக, மற்றவர்கள் தெரிவித்ததாக, செய்திகளில் படித்ததாக, நமக்கு நேர்ந்ததாக இருக்கலாம்.

இவற்றை அனைத்தையும் மற்றவரிடம் கூற வேண்டும் என்பதில்லை. குறிப்பாகக் குடும்பத்தினருக்கு, நெருங்கிய நபர்களிடையே சில விஷயங்களைத் தவிர்ப்பது.

காரணம், அவர்களால் இப்பிரச்சனையில் எதுவுமே செய்ய முடியாது ஆனால், கூறும் செய்திகளால் அவர்கள் மன உளைச்சல் அடையலாம், மன அழுத்தம் ஏற்படலாம்.

சம்பந்தப்பட்ட பிரச்சனை தானாகவே சரியாகி விடலாம். எனவே, அதற்குள் அவசரப்பட்டு இன்னும் நான்கு பேரைப் பதட்டத்துக்கு உள்ளாக்குவது தவறு.

பெரும்பாலும் இவ்வாறு கூறக்காரணம், தங்களுக்கு ஏற்பட்ட சம்பவத்தை யாரிடமாவது கூறினால் மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என்று நினைப்பார்கள்.

இது தவறில்லை ஆனால், பக்குவப்பட்டவராக இருந்தால் கவலையில்லை ஆனால், அதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தால் பிரச்சனை.

எனவே, சிலவற்றைக் கூறாமலே தவிர்க்கலாம் அல்லது அதைக் கூறினால் பக்குவமாகக் கையாள்பவர்களாக இருக்க வேண்டும்.

எதிர்காலப் பயம்

சில விஷயங்கள் எதிர்காலத்தில் நடக்கலாம், நடக்காமலும் போகலாம். எனவே, அவற்றைத் தற்போதே எளிதாக எடுத்துக்கொள்ளாதவரிடம் கூறினால், அவர் எதிர்காலத்தை நினைத்துப் பதட்டமாவார்.

இதனால், சம்பந்தமே இல்லாமல் ஒருவரை மன அழுத்தத்துக்கு உள்ளாக்குவதைத் தவிர வேறு எதுவும் நடக்கப்போவதில்லை.

காரணம், யாராலும் எதுவும் செய்ய முடியாது. நடக்கும் போது தான் முடிவு தெரியும் என்றால், யார் தான் என்ன செய்து விட முடியும்?!

எச்சரிக்கை படுத்துவது வேறு, பயப்படுத்துவது வேறு.

கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் வாழ்வதை விட நிகழ்காலத்தில் வாழ்வதே சிறந்தது.

எனக்கு எல்லாமே தெரியும்!

தனக்குத்தான் எல்லாமே தெரியும், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு இவை பொருந்தாது.

ஒரு விஷயத்தில் நமக்குத் தெளிவில்லை என்றால், அதைச் சரியான நபரிடம் கூறி ஆலோசனை கேட்பது நல்லது.

நாம் எடுக்கும் முடிவு தான் சரி என்று கூறாமல் விட்டால், எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாகி விடக்கூடிய அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

எனவே, ஒரு விஷயத்தை மற்றவரிடம் கூறினால் அவர்களால் எந்த உதவியும் செய்ய முடியாது ஆனால், மன உளைச்சல் மட்டுமே அடைவார்கள் என்று 100% தெரிந்தால் மட்டுமே தவிர்க்க வேண்டும்.

தனிப்பட்ட அனுபவங்கள்

மேற்கூறிய அனைத்து நிலைகளிலும் இருந்து, அதைக்கடந்து வந்துள்ளேன் என்பதால், முழுக்கத் தனிப்பட்ட அனுபவங்களை வைத்தே கூறியுள்ளேன்.

எடுத்துக்காட்டுக்கு, சில விஷயங்களைப் பயனில்லை என்றால் அம்மாவிடம் கூற மாட்டோம். காரணம், கூறினாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாது.

கூறுவதால், அம்மா மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் காரணம், அவரால் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. மிகவும் மெல்லிய மனது கொண்டவர்.

எனவே, அனைத்தும் முடிந்த பிறகு செய்தியாகக் கூறும் போது அதன் தாக்கம் இருக்காது என்பதால், அம்மாவும் அதைத் தகவலாக எடுத்துக் கடந்து விடுவார்கள்.

இது போல மனைவிக்கு, நண்பர்களுக்கென்று நிறைய நடந்துள்ளது.

நிகழ்காலம்

எனக்கு மன அழுத்தம் ஏற்படுவதில்லை. காரணம், எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல், நிகழ்காலத்தில் வாழ்கிறேன்.

இதற்கு நேர்மறை எண்ணங்கள் மிக உதவியாக உள்ளது.

எனவே, முக்கியமான விஷயத்தை மற்றவரிடம் கூறும் முன்பு பல முறை யோசித்துப் பின் கூறுங்கள். இதனால் பல சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

அடுத்தவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்?

கோபம் இருந்தால் மகிழ்ச்சி இருக்காது

செய்த தவறுக்காக வருந்துகிறீர்களா?!

Previous articleஆகஸ்ட் 18.., புதிய மாருதி சுஸுகி ஆல்டோ அறிமுகம்
Next articleTelangana’s supersized secretariat – Nation News