தேசிய ஓய்வூதிய திட்டம் National Pension System

தேசிய ஓய்வூதிய திட்டம் அப்போதைய காங் அரசால் 2004 ல் மத்திய அரசு ஊழியர்களுக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் 2009 ல் தனியார் ஊழியர்களுக்கும், அனைவருக்கும் விரிவாக்கப்பட்டது. Image Credit

தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension System)

2009 ல் இருந்து அனைவருக்குமானதாக இருந்தாலும், இதில் இணைய மக்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆர்வம் கட்டவில்லையென்பதை விடப் பலருக்குத் திட்டம் இருப்பதே தெரியவில்லை.

2015 ல் பாஜக அரசு ₹1,50,000 (80 CCD (1)) வரிச்சலுகையோடு கூடுதலாக ₹50,000 (80CCD(1B)) வரிச்சலுகையை அறிவித்தது.

இதன் பிறகே பலரும் NPS யில் இணையத் துவங்கினார்கள்.

இவையல்லாமல் ஊதியத்தில் Basic ல் 10% வரிச்சலுகையும் (80CCD (2)) பன்னாட்டு (Corporate) நிறுவங்களுக்குக் கொடுக்கப்பட்டது.

நேரடியாக Salary Slip ல் காட்ட மாட்டார்கள். Special Allowance என்று கொடுப்பதில் இதைக் கழித்துக்கொள்வார்கள்.

அதாவது உங்கள் ஊதியம் ஆனால், ஊதியக் கணக்கில் வராமலே, நிறுவனத்தின் மூலம் NPS க்கு சென்று விடும்.

NPS திட்டத்தில் எவரும் 18 வயது முதல் 70 வயது வரை இணையலாம்.

குறைந்த பட்சம் மாதம் ₹500 / வருடத்துக்கு ₹6,000 செலுத்த வேண்டும்.

ஓய்வூதிய திட்டமிடுதல்

பலர் ஓய்வூதிய திட்டமிடலை வயதானவர்களுக்கென்று நினைத்துக்கொண்டுள்ளார்கள், தவறான கருத்து.

பலன் அடைவது என்னவோ வயதானவர்களாக இருக்கலாம் அதற்கு இள வயதிலிருந்து திட்டமிட்டால் தான் ஓய்வு காலம் எளிதாக இருக்கும்.

பலர் இன்னமும் 45 வயதைக்கடந்தும் ஓய்வுக்குப் பிறகு எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்பதைப் பற்றிக் கவலையே இல்லாமல் இருக்கிறார்கள்.

பணியில் இணைந்தது முதலே NPS போன்ற திட்டங்களில் மாதாமாதம் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி வந்தால், இறுதிக்காலங்களில் நெருக்கடி இருக்காது.

இதைச் செய்யாமல் விட்டால், இறுதிக்காலம் மிக மோசமாக அமைந்து விடும்.

வட்டி

எதிர்காலத்தில் கொடுக்கப்படும் வட்டி சதவீதம் குறைந்து கொண்டு தான் வரும். அதிகரிப்பது எப்போதாவது தான் நடக்கும்.

காரணம், வங்கிகளுக்குப் பணத்தேவை இருந்தால் மட்டுமே அதிக வட்டி கொடுத்துப் பணத்தை நம்மிடமிருந்து FD, RD என்று பெறுவார்கள்.

வளர்ந்து வரும் நாடுகள், வளர்ந்த நாட்டு வங்கிகளிடம் பணம் ஏற்கனவே நிறைய இருக்கும். எனவே, பணத்தைத் திரட்ட வேண்டிய தேவை அதிகம் இருக்காது.

இவையல்லாமல் பங்குச்சசந்தைகளில் வங்கிகள் அதிகப் பணத்தை ஈட்டுகின்றன.

எனவே, அதிக வட்டி கொடுக்க வேண்டிய தேவையிருக்காது. வளர்ந்த நாடுகளில் 1% வட்டி கூட இருக்கும்.

இந்தியாவில் 11% வட்டியிலிருந்து 6% வட்டி வந்து விட்டது, இதற்கு மேற்கூறிய காரணங்களே.

வட்டியை நம்பி இருந்தவர்கள் பிற்காலத்தில் சிரமப்பட இதுவே காரணமாக அமைந்து விடுகிறது.

வட்டியைக்குறைத்தால், அவர்களுக்கான மாத வருமானமும் குறைந்து விடுகிறது.

காரணம், PF பணத்தின் மீதான வட்டியில் வாழ்க்கையை நடத்தலாம் என்று இருப்பவர்களுக்கு நெருக்கடியாகி விடுகிறது.

NPS பங்குச்சசந்தை முதலீடு

எனவே, NPS நமது ஓய்வூதிய சேமிப்பை பங்குசந்தைகளில் முதலீடு செய்து, அவற்றை நமக்கு வட்டியாகக் கொடுக்கிறார்கள்.

எனவே, இது நிரந்தரமான வட்டி தொகையில்லை.

சந்தை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப முதலீட்டுத் தொகை மாறிக்கொண்டு இருக்கும்.

சேமிப்புக்கு வங்கி தோராயமாக 5% – 6% வட்டி கொடுத்தால், பங்குச்சந்தைகளில் நம் NPS பணம் முதலீடு செய்யப்படுவதால், 11%15% வட்டி கிடைக்கும்.

இதற்கு மேலும் செல்லலாம்.

இதில் இரண்டு வகையில் நம் பணத்தை மேலாண்மை செய்ய NPS வாய்ப்பளிக்கிறது.

Automatic & Active

Automatic என்பது மேலாண்மை செய்வதற்கென்றே உள்ளவர்களிடம் பொறுப்பைக் கொடுத்து விடுவது. வயதுக்கு ஏற்றபடி தானியங்கியாகவே NPS மாற்றிக்கொள்ளும்.

Active என்பது எதில் எவ்வளவு சதவீதம் முதலீடு செய்யலாம் என்பதை நாமே முடிவு செய்யலாம்.

Equity, Government Bond, Corporate Bond என்று மூன்று பிரிவுகளில் முதலீடு செய்யலாம்.

Equity என்பது பங்குசந்தைகளில் முதலீடு செய்வதற்கான சதவீதம். இதில் அதிகப் பட்சம் தற்போதைக்கு (2021) 75% மட்டுமே 50 வயது வரை முதலீடு செய்ய முடியும்.

மீதி 25% மற்ற இரண்டில் முதலீடு செய்யலாம். Government Bond, Corporate Bond அதிக RISK இல்லாதது ஆனால், இலாபம் குறைவானது.

Equity யில் அதிகச் சதவீதம் முதலீடு செய்தால், உங்களுக்கான இலாபம் அதிகம் கிடைக்கும்.

பங்குச்சந்தை முதலீடு ஆபத்துள்ளது என்பதால், வயது ஏற ஏற Equity யில் முதலீடு செய்யும் சதவீதத்தை NPS குறைத்துக் கொண்டே வரும்.

காரணம், வயதான காலத்தில் RISK எடுக்க முடியாது என்பதால்.

ஒவ்வொருவரின் தனிப்பட்ட சூழ்நிலை, RISK பொறுத்து 50 வயது வரை Equity 75% தொடரலாம் அல்லது குறைக்கலாம்.

சிலருக்கு நிச்சயம் இப்பகுதி குழப்பத்தை அளிக்கும். எனவே, புதிதாக NPS முயற்சிப்பவர்கள் Automatic தேர்வு செய்து கொள்ளலாம்.

பின்னர் இது குறித்த புரிதல் கிடைத்த பிறகு Active க்கு மாற்றி விருப்பம் போல மேலாண்மை செய்யலாம், அவசரமில்லை.

PFRDA (Pension Fund Regulatory and Development Authority)

தொலைபேசி நிறுவனங்களை TRAI, காப்பீட்டு நிறுவனங்களை IRDA, பங்குச்சந்தையை SEBI, நிதி நிறுவனங்களை RBI கட்டுப்படுத்துகிறது.

இது போல ஓய்வூதிய திட்டங்களை, நிறுவனங்களை PFRDA கட்டுப்படுத்துகிறது.

NPS பணம் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்படுகிறது. எனவே, இதில் RISK அதிகம்.

ஒரு சராசரி நபரின் மொத்த வாழ்க்கையும் இந்தச் சேமிப்பில் அடங்கியுள்ளது.

இதில் சிறு தவறு நடந்தாலும் இதை நம்பியுள்ள பல கோடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடும். எனவே, PFRDA தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது.

எனவே, தகுதி வாய்ந்த திறமையான ஆலோசகர்களால், கட்டுப்பாட்டுடன் ஓய்வூதியப் பணம் முதலீடு செய்யப்படுகிறது.

எனவே தான், 75% கட்டுப்பாடெல்லாம் வருகிறது.

தற்போதைக்கு LIC, HDFC, ICICI உட்பட 7 நிறுவனங்கள் ஓய்வூதிய பணத்தை மேலாண்மை (fund managers) செய்கின்றன.

நிறுவனத்துக்கு ஏற்ப இலாபம் கூடக் குறையலாம். குறிப்பிட்ட நிறுவனத்தில் இலாபம் இல்லையென்றால், வேறு நிறுவனத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

PFRDA அனுமதி பெற்ற பிறகே இந்நிறுவனங்கள் இதில் இணைய முடியும்.

Automatic / Active மாற்றுவதை ஆண்டுக்கு இரு முறையும், நம் பணத்தை மேலாண்மை செய்யும் நிதி நிறுவனத்தை ஆண்டுக்கு ஒரு முறையும் மாற்றலாம்.

நிறைகள்

 • 11% முதல் 15% வரை (அதற்கு மேலும்) இலாபம் (வட்டி) கிடைக்கும்.
 • முதலீடு செய்யும் தொகைக்கு உச்ச வரம்பு இல்லை.
 • மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது.
 • ஓய்வூதிய பணத்தை மேலாண்மை செய்ய மிகக்குறைந்த தொகை (0.01%) மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
 • குறைந்த வயதில் இருந்தே முதலீடு செய்து வந்தால், அதிக இலாபத்தை, பயனை அடையலாம்.
 • எவரும் NPS கணக்குத்துவங்கலாம் (NRI உட்பட).
 • துவக்கத்தில் இருந்தே NPS ல் முதலீடு செய்தால், ஓய்வு பெறும் வயதில் கோடிகளில் இருக்கும். குறைவான முதலீட்டுக்குப் பல இலட்சங்களில் கிடைக்கும்.
 • பணத்தை எடுக்கும் போது 60% தொகைக்கு வரி இல்லை.
 • PF / Superannution பணத்தை NPS க்கு இறுதியில் மாற்றிக்கொள்ளலாம்.
 • Nominee வைத்துக்கொள்ளலாம். நமக்குப்பிறகான முழுத்தொகையும் Nominee க்கு சென்று விடும்.

குறைகள்

 • 60 வயது வரை பணத்தை எடுக்க முடியாது.
 • தகுதியான காரணங்களோடு அதிகபட்சம் 25% பணத்தை 60 வயதுக்குள் மூன்று முறை எடுக்கலாம்.
 • 60% பணத்தை மட்டுமே எடுக்க முடியும். மீதி 40% ஓய்வூதிய பணமாகக் கருதப்பட்டு மாதாமாதம் பணம் கொடுக்கப்படும்.
 • எடுத்துக்காட்டுக்கு, 10 லட்சம் பணம் உள்ளது என்றால் 6 லட்சம் மட்டுமே எடுக்க முடியும்.
 • கிடைக்கும் மாத ஓய்வூதிய தொகைக்கு வரி உண்டு.
 • பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யப்படுவதால், RISK உள்ளது.

இரு வகைகள்

NPS ல் TIER 1 & TIER 2 என்ற இரு பிரிவுகள் உள்ளன.

மேற்கூறிய அனைத்தும் TIER 1 பிரிவுக்குப் பொருந்தும்.

TIER 2 கிட்டத்தட்ட மியூச்சுவல் ஃபண்ட் போன்றது. எனவே, TIER 2 கணக்குத்துவங்க வேண்டிய அவசியமில்லை.

NPS ல் அதிகம் முதலீடு செய்யலாமா?

NPS ல் அதிக முதலீடு செய்வது சரியான யோசனையல்ல.

காரணம், NPS நிதி கட்டுப்பாடுகள் காரணமாக மியூச்சுவல் ஃபண்ட்டுடன் ஒப்பிடும் போது குறைவான இலாபமே கிடைக்கும்.

அதுவும் இல்லாமல் இதில் அதிக முதலீட்டைச் செய்து விட்டால், 60 வயது வரை அவசரத்தேவைக்குப் பணத்தை எடுக்க முடியாது.

எனவே, மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்து, அப்பணத்தை ஓய்வு பெறும் போது NPS க்கு மாற்றி விடலாம்.

இவற்றுடன் NPS யை விட அதிக மாத தொகை பெறுவதற்கான திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்ட்டில் உள்ளது.

எனவே, NPS யில் அதிகமாக முதலீடு செய்து விட்டால், பின்னர் மாற்ற முடியாது.

பின்னர் வேறு பலனளிக்கும், அதிக இலாபம் தரும் திட்டங்கள் மற்ற வழிகளில் வந்தால், அதற்கு முதலீடு செய்ய NPS யில் முடங்கிய பணத்தை எடுக்க முடியாது.

மத்திய அரசு சீரான இடைவெளியில் NPS திட்டத்தை மேம்படுத்தி வருகிறது.

எனவே, காலத்துக்குத் தகுந்த மாதிரி அந்தக்காலங்களில் எது சரியோ அதன் படி திட்டமிட்டுக்கொள்ளலாம்.

நமது சேமிப்பை ஒரே இடத்தில் முடக்கக் கூடாது. ஒருவேளை இதில் நட்டமானால் மொத்த பணத்துக்கும் பிரச்சனையாகி விடும்.

பரிந்துரை

முன்னரே கூறியபடி திட்டத்தின் பெயர் தேசிய ஓய்வூதிய திட்டம் என்று இருந்தாலும், இள வயதினருக்கான திட்டமே இதுவாகும்.

எவ்வளவுக்கெவ்வளவு முன்னரே இதில் முதலீடு செய்ய ஆரம்பிக்கிறீர்களோ அவ்வளவு நல்லது.

உங்களால் மாதம் ₹10,000 செலுத்த முடிந்தால், 30 வருடங்களில் தோராயமாக ₹2 கோடியே 20 இலட்சம் (வட்டியுடன்) கிடைக்கும்.

NPS, PF, Super Annuition பணமெல்லாம் கண்ணுக்குத்தெரியாமல் இறுதியில் பெரிய சேமிப்பாகக் கிடைக்கும்.

சிறு துளி பெரு வெள்ளம் என்பதற்கு இவை நன்கு பொருந்தும்.

எனவே, ஊதியம் குறைவாக இருந்தாலும் சரியாகத் திட்டமிட்டால் மிகப்பெரிய தொகையை இறுதியில் ஓய்வூதிய பணமாகப் பெறலாம்.

பணவீக்கத்தை (Inflation) கருத்தில் கொண்டு ஓய்வுத்தொகையைத் திட்டமிட வேண்டும்.

2035 ல் மாதம் ஒரு இலட்சம் இருந்தால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும் என்றால், அதற்குத் தகுந்த மாதிரி திட்டமிடல் வேண்டும்.

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு எதிர்காலப் பாதுகாப்பு இல்லை. எனவே, இதில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து வருவது நல்லது.

அதோடு முதலீடு செய்வதற்கு வரிச்சலுகையும் இருப்பதால், பயன்படுத்திக்கொள்ளலாம்.

எதிர்காலத்தில் பிள்ளைகளை நம்பி இருக்கும் சூழ்நிலை இருக்காது. காரணம், பெற்றோரை உடன் வைத்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.

எனவே, மாத செலவுகளுக்கு அடுத்தவரை நம்பியிராமல் தற்போதே தயார் படுத்தித் திட்டங்களை அமைத்துக்கொள்ளுங்கள்.

இல்லையென்றால், ஓய்வு காலம் நரகமாக மாறி விடும்.

இதைப்படிக்கும் அனைவரையும் NPS கணக்குத் துவங்கப் பரிந்துரைக்கிறேன் குறிப்பாக இள வயதினர், அரசு ஊழியர் அல்லாதவர்கள்.

NPS கணக்கை ஏதாவது ஒரு வங்கிக்கணக்கின் மூலம் சில நிமிடங்களில் துவக்கி விடலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

Sovereign Gold Bonds வாங்கலாமா?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யலாமா?

வயதானவர்களின் நிலை என்ன?

Previous article#roshniharipriyan #roshni…
Next articleமக்களை முட்டாளாக்குவதை நிறுத்துங்க சார்! இனிமே பெட்ரோல் விலை ஏறலாம்! எச்சரிக்கும் ராகுல் காந்தி..! | Govt must stop fooling citizens says congress rahul gandhi