Delhi
oi-Nantha Kumar R
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி அவர் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ‛‛1991ல் திமுக ஆட்சி கலைப்புக்காக சென்னை வந்தபோது புலி இல்லை. எலி தான் இருந்தது” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்பத்தூரில் 1991ம் ஆண்டு மே 21ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.
இந்த படுகொலை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலக நாடுகளையும் உற்றுநோக்க வைத்தது.

31வது நினைவு நாள்
மே 21ம் தேதியான இன்று ராஜீவ் காந்திக்கு 31வது நினைவுநாளாகும். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லி வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

ராகுல்காந்தி புகழாரம்
ராஜீவ் காந்தி பற்றி ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதில் “எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார். அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது. அவர் ஒரு இரக்கமுள்ள, கனிவான மனிதராக இருந்தார். எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தை. எங்களுக்கு மன்னிப்பு மற்றும் இரக்ககுணத்தை கற்று கொடுத்திருந்தார். நான் அவரை மிஸ் செய்கிறேன். நாங்கள் ஒன்றாகக் கழித்த நேரத்தை அன்புடன் நினைவில் கொள்கிறேன்” என்று அதில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

சுப்பிரமணியசாமி கருத்து
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் பிற தலைவர்களும் ராஜீவ்காந்திக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் ராஜீவ்காந்தி வழக்கு பற்றியும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி தனது டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

புலி அல்ல எலி
அதில் சுப்பிரமணியசுவாமி , ‛‛ஆற்றல்மிகு பிரதமரான ராஜீவ்காந்தியை 1991ம் ஆண்டு இதே நாளில் புலிகள் அமைப்பினர் கொலை செய்னர். திமுக ஆட்சி கலைப்புக்கு 1991ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி சட்டம் மற்றும் நீதித்துறையின் கேபினட் அமைச்சராக சென்னை வந்தேன். அப்போது அனைத்து புலிகளும் மறைந்துவிட்டனர். நான் அவர்களை தேடினேன். எங்கேயும் இல்லை. நகரின் கழிவுநீர் குழாய்களில் புலி அல்ல எலி இருந்தது” என விமர்சனம் செய்துள்ளார்.

ஏன் இப்படி கூறுகிறார்?
திமுக 13 ஆண்டுகளுக்கு பிறகு 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்தது. அப்போது மத்தியில் பிரதமராக சந்திரசேகர் இருந்தார். தமிழ்நாட்டில் விடுதலைபுலிகளின் நடமாட்டம் அதிகரித்ததாக அதிமுகவும், காங்கிரசும் குற்றம்சாட்டிய நிலையில் திமுக அரசை 1991ஜனவரி 30ல் பிரதமர் சந்திரசேகர் கலைத்தார். அதன்பிறகு நடந்த தமிழக சட்டசபைக்கு மறுதேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக, காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்திருந்தது. இந்த பிரசாரத்துக்கு வந்தபோது தான் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

அனுதாப அலையில் தேர்தல்
இதையடுத்து தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு ஜூன் 15ல் நடந்தது. இந்த தேர்தலில் அனுதாப அலை காங்கிரஸ் பக்கம் வீசியது. இதனால் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் 60 இடங்களில் வென்றது. அதிமுக 164 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் படுதோல்வியை சந்தித்தன. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மட்டும் துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
English summary
BJP Senior Leader Subramaniyan Swamy says, ‛‛LTTE this day in 1991 killed Rajiv Gandhi, a leader who was a dynamic PM. i arrived in chennai on January 29, 1991 supervise as cabinet minister for laaw and justice, No Puli But Eli’’.