Chennai
oi-Vignesh Selvaraj
சென்னை: பேரறிவாளன் தீர்ப்பு வந்தபோது தலைமை செயலகத்தில் மீட்டிங்கில் இருந்த முதல்வர் ஸ்டாலின், கூட்டத்திற்கு இடையிலேயே இந்த தகவலை அனைவரிடமும் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நடைபெற்ற ‘திஷா’ கூட்டத்தில் இருந்தார். கூட்டத்தின் இடையிலேயே பேரறிவாளனின் விடுதலை குறித்து மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
போகாத சொந்தம் திரும்பி வராது! அதை போல் தான் இதுவும்! ஆய்வில் நச் அறிவுரை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

திமுக சட்டப் போராட்டம்
2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதே, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் கட்டாயம் விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை தி.மு.க மேற்கொள்ளும் என வாக்குறுதி அளித்தார் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு ஆளுநரைச் சந்தித்து ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். குடியரசுத் தலைவருக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தினார். பின்னர் பேரறிவாளனுக்குத் தொடர்ச்சியாக தி.மு.க அரசு பரோல் கொடுத்து வந்தது. அதனால் கடந்த ஓராண்டு காலமாகவே வெளியில் தான் இருக்கிறார் பேரறிவாளன.

அழுத்தமான வாதங்கள்
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி முடிவு எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார் என உச்சநீதிமன்ற விசாரணையின்போது தமிழ்நாடு அரசு தனது வாதங்களை அழுத்தமாக முன்வைத்து வந்தது. இந்நிலையில்தான் இன்று, ஆளுநர் காலதாமதம் செய்தது தவறு என்று கூறி பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.

பேரறிவாளன் விடுதலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்துவந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் விடுதலை வழங்கி இன்று தீர்ப்பளித்துள்ளது. ஆளுநர் கால தாமதம் செய்ததால் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 142 சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

தலைமை செயலகத்தில்
பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நேரத்தில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) முதல் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, திருநாவுக்கரசர், திருமாவளவன், ஆர்.எஸ்.பாரதி, நவநீதகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், எழிலன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அறிவித்த ஸ்டாலின்
இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட தகவல் அவருக்கு கிடைத்துள்ளது. இதனால், மகிழ்ச்சியடைந்த முதல்வர் ஸ்டாலின், உடனடியாக, அங்கிருந்தவர்களிடம் பேரறிவாளனுக்கு விடுதலை கிடைத்த தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இதனால், அங்கு கூடியிருந்த அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும் மகிழ்ந்துள்ளனர். பேரறிவாளன் விடுதலைக்காக தொடர் முயற்சிகளை மேற்கொண்ட முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் கூறியுள்ளார்.

ஆலோசனை
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த முழு விவரம் கிடைத்தவுடன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார் ஆகிய மற்ற 6 பேரின் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அந்தக் கூட்டத்திலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

போனில் வாழ்த்து
அதோடு, தலைமை செயலகத்தில் தனது அறையில் இருந்தே பேரறிவாளனையும், அவரது தாயார் அற்புதம்மாளையும் தனது செல்போனிலேயே உடனடியாக தொடர்பு கொண்டு பேசி வாழ்த்துத் தெரிவித்து அவர்களுடன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்டாலின். அப்போது அற்புதம்மாள் முதல்வரை சந்திக்க வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தீர்ப்புக்கு வரவேற்பு
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், பேரறிவாளன் என்ற தனிமனிதனின் விடுதலையாக மட்டுமல்ல, கூட்டாட்சித் தத்துவத்துக்கும், மாநில சுயாட்சி மாண்புக்கும் இலக்கணமாகவும் அமைந்துள்ள இத்தீர்ப்பு மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவுகூரத்தக்கது. பேரறிவாளன் விடுதலை தீர்ப்பின் மூலம் மாநிலத்தின் உரிமை மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

தாய்மையின் இலக்கணம் அற்புதம்மாள்
மேலும், மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை களைய, எந்த எல்லைக்கும் சென்று போராடத் தயங்காதவர் அற்புதம்மாள், தாய்மையின் இலக்கணம். சட்டத்தின் ஷரத்துகளை வெல்லும் திறன் ஒரு துளி நியாயமான கண்ணீருக்கு உண்டு என்பதை காலம் காட்டியுள்ளது. 31 ஆண்டுகளுக்கு பின் சுதந்திர காற்றை சுவாசிக்கும் பேரறிவாளனுக்கு வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
English summary
MK Stalin happily announced about Perarivalan release verdict in the middle of the meeting at secretariat.
Story first published: Wednesday, May 18, 2022, 16:40 [IST]