தனிமை

மே மாதம் 2021 சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற எழுத்தாளரான கி ரா எனப்படும் கி.ராஜநாராயணன் வயது முதிர்வு காரணமாகக் காலமானார், வயது 99.

தமிழக அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்ததும், எழுத்தாளர் ஒருவருக்கு இத்தகைய மரியாதை கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

கி.ராஜநாராயணன்

கி ரா காலமான போது அவர் பற்றிய பல கட்டுரைகள் வெளி வந்தன. இதுவரை தெரியாதவர்களும் இவரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.

விகடன் எடுத்த பேட்டியில் கி ரா கூறியிருந்த ஒரு கருத்து, எனக்குத் தொடர்பானதாக இருந்ததால், அதை மட்டும் இங்கே பகிர்கிறேன். (நன்றி விகடன்)

"இசை தெரிஞ்சவனுக்கு ஏதய்யா தனிமை… அது துணைக்கிருக்குமே… எழுதத் தெரிஞ்சவன், படிக்கத் தெரிஞ்சவனுக்கெல்லாம் தனிமையே தெரியாது." 

தனிமை

பலரும் தனிமையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஓரிரு நாட்களிலேயே சலிப்பாகி விடுவார்கள். வசதிகள் இருந்தாலும், தனிமையை வெறுமையாகக் கருதுவார்கள்.

எனக்குத் தனிமை எப்போதும் வெறுத்தது இல்லை. ஏனென்றால், வாழ்க்கையில் பல காலங்கள் தனித்து இருக்க வேண்டிய சூழலே இருந்தது.

சென்னை, சிங்கப்பூர் என்று பெரும்பாலான வருடங்கள் தனிமையிலேயே இருக்க வேண்டியதாக இருந்தது.

சிறு வயதில் மாணவர் விடுதி என்று அனைத்து சூழ்நிலைகளுக்கும் பழக வேண்டிய சூழல் அமைந்து விட்டது.

கொரோனா இரு ஊரடங்கு காலத்திலும் குடும்பத்தினர் இல்லாமல், கிட்டத்தட்ட 2 + 2 மாதங்கள் தனிமையிலே இருக்க வேண்டிய சூழல்.

இருப்பினும், ஊரடங்கால் சாப்பிட பிரச்சனையானதே தவிரத் தனிமை பிரச்சனையாகவில்லை.

இசை

எங்கு இருந்தாலும் உடன் இருப்பது இசை.

சிறு வயதில் இருந்தே பழகி விட்டது. தற்போது இணைய வானொலிகள், செயலிகள் வந்த பிறகு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கின்றன.

அதோடு ஒலி சாதனம் (Speaker) இருப்பதால், எப்போதும் பாடிக்கொண்டே இருக்கும்.

அலுவலகலத்திலும் இசையோடு தான் இருப்பேன். மெல்லிய ஒலியில் மடிக்கணினியில் பாடிக்கொண்டே இருக்கும்.

திரைப்படங்கள்

சிறு வயதில் இருந்தே திரைப்படங்கள் மீதான ஆர்வம் அதிகம் என்றாலும், உலகப்படங்களைக் காணும் வாய்ப்பு சிங்கப்பூர் சென்ற பிறகே கிடைத்தது.

இதற்குக் கட்டற்ற இணையம் உதவியாக இருந்தது மிக முக்கியக்காரணம்.

தற்போது NETFLIX, Amazon, Hotstar போன்றவை வாய்ப்புகளை அதிகப்படுத்தியதால், ஏராளமான திரைப்படங்களைக் காணும் வாய்ப்பு எளிதாகக் கிடைத்துள்ளது.

அதோடு 3300 GB யை ACT Fibernet தருகிறது. என்ன பயன்படுத்தினாலும், ஒரு மாதத்துக்கு 350 GB யைத்தாண்டியதில்லை.

இவ்வளவுக்கும் ஒரே நாளில் 4 – 5 திரைப்படங்கள் கூடப் பார்ப்பேன்.

புத்தகங்கள்

இழந்த புத்தக ஆர்வத்தை மீட்டெடுத்தது பொன்னியின் செல்வன், அதைத் தொடர்ந்து தக்க வைத்தது Amazon Kindle சாதனம்.

எங்கும் எடுத்துச் செல்லலாம், எவ்வளவு புத்தகங்கள் வேண்டும் என்றாலும் வைத்துக்கொள்ளலாம், இரவிலும் படிக்கலாம் என்பன போன்ற வசதிகள் பயனுள்ளதாக உள்ளது.

எனவே, திரைப்படங்கள் பார்க்க, எழுத எதுவும் இல்லாத நேரத்தில் புத்தகங்கள் உதவும். பயணங்களில் மிக உதவியாக இருக்கும்.

எழுத்து

2006 முதல் எழுதத் துவங்கி தற்போது (2021) வரை இடைவெளியின்றித் தொடர்வதால், எதையாவது எழுதிக்கொண்டே இருக்கத் தோன்றும்.

உடன் தொழில்நுட்பத்தில் ஆர்வம் என்பதால், இத்தளத்தை புதுப்பித்து, மேம்படுத்தி வருகிறேன்.

இது சுவாரசியமாக உள்ளதாலும், மேலும் புதிதாகக் கற்றுக்கொள்ள முடிவதாலும் சலிப்பை ஏற்படுத்துவதில்லை.

இணையத்தின் மூலமாகக் கண்டறிந்து பிறர் உதவி இல்லாமல் அதைச் செயல்படுத்தும் போது கிடைக்கும் திருப்தி அளவிட முடியாதது.

எனவே, இசை, எழுத்து, திரைப்படங்கள், புத்தகங்கள், இணையம் என்று எப்போதும் ஏதாவது ஒன்றில் ஈடுபடுத்த வாய்ப்புள்ளதால், தனிமையை உணருவதே இல்லை.

கி ரா அவர்கள் கூறுவது உண்மையே.

தனிமை ஏற்புடையதா?

எதோ ஒன்றை ரசிக்கத் தெரிந்தாலே தனிமையை உணர வேண்டியதில்லை எனும் போது எனக்கு ஐந்து வாய்ப்புகள் உள்ளதால், பிரச்சனையே இல்லை 🙂 .

தனிமை என்றில்லை, அனைத்து சூழ்நிலைகளுக்கும் தகுந்த மாதிரி மாற்றிக் கொள்ள முடிவது, எனக்குக் கடவுள் கொடுத்த வரமாகக் கருதுகிறேன்.

உங்களுக்குத் தனிமை ஏற்புடையதா? தனிமையை வெறுக்கிறீர்களா?

தனிமையை வரவேற்க வேண்டியதில்லை ஆனால், அச்சூழ்நிலை அமைந்தால், சமாளிக்க முடிகிறதா? பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

Sony HT-RT3 Real 5.1ch Dolby Digital Soundbar

அமேசான் Kindle ஏன் வாங்க வேண்டும்?!

NETFLIX Vs Amazon Prime Video Vs Hotstar எது சிறந்தது?

Previous article₹ 1.60 லட்சத்தில் யமஹா MT-15 V2 விற்பனைக்கு வந்தது
Next articleMango Pachadi | Mambazha Pachadi | Sweet Mango Relish