1993களில் சரவணனாக நான்
பார்த்த இளைஞன் நடிகர் சூர்யாவாக பரிணமித்து இன்றைக்கு சமூக நீதிக்காக குரல்
கொடுக்கும் கலகக் குரலாக வளர்ந்து நிற்பது கண்டு வியப்பும் மகிழ்ச்சியும்
அடைகிறேன். காலம் காலமாக அமைப்புகளில் இயங்கும் நபர்கள் அதிகாரத்தைக் கேள்வி
கேட்பது நடந்தாலும்
, உயிர் தியாகங்கள் செய்தாலும் நடிகர்
(அல்லது பிரபலம்) ஒருவர் கேட்கும் கேள்வி அதிகார மையங்களுக்கு அச்சத்தை
ஏற்படுத்துகிறது. இன்னொரு பக்கம் ஆட்சியைப் பிடிக்க அலைபாயும் சில கட்சிகளின்
‘ஆதரவாளர்களுக்கு’ பொறாமையை ஏற்படுத்துகிறது. இது மிகவும் சிறுபிள்ளைத்தனமான
மனநிலை.

உண்மையான
போராளிகளுக்கு ‘லைம் லைட்டை’ யார் அள்ளிக் கொண்டு போகிறார்கள் என்கிற கவலை இல்லை.
அவர்களுக்குத் தேவை அதிகாரத்தை எதிர்க்கும் தங்களின் போராட்டங்களுக்கு வலுவான
குரல்களும்
, ஆதரவுகளுமே. அந்த வகையில் சூர்யா (ஜோதிகா, கார்த்தி உள்ளிட்டோர்) போன்றோரின் குரல் மிகவும் முக்கியமானது. பலமானதும்
கூட. ஏனெனில் அது பெருவாரியான மக்களிடையே நல்ல / சரியான சிந்தனையை / அரசியலைக்
கொண்டு சேர்க்க உதவுகிறது. அதிகார மையங்களுக்கு அதுதான் பீதியைக் கிளப்புகிறது.
சூர்யா தாக்குதலுக்கும்
, அச்சுறுத்தலுக்கும் உள்ளாகிறார்.
கூடுதலாக அவரின் உள்நோக்கம்
, வெளி நோக்கம், ஃபவுண்டேஷன், சாதி எல்லாம் தோண்டி எடுக்கப்படுகிறது.

சூர்யாவாக
இருந்தாலும்
, யாராக இருந்தாலும் அவர்களின் தவறான செயல்பாடுகள்
ஆதாரபூர்வமாக வெளியாகாதவரை அவர்களின் பேச்சும்
, செயல்பாடும்
மட்டுமே கவனத்திற்குரியது. தவறு தெரியவரும்போது அதுகுறித்து கேள்வி
எழுப்பிக்கொள்ளலாம். அதுவரை அவர் கேட்கும் கேள்விகளுக்கு அதிகார மையங்கள் பதில்
சொல்லட்டும்.

நான் அறிந்த சூர்யா!

லயோலா கல்லூரியில்
நான் விஸ்காம் படிக்கையில் அவர் பி.காம் படித்தார். (
1992-1995). மிகவும் ‘சாது’. எனக்கு அவர் நண்பர் எல்லாம் இல்லை. சிவக்குமார் மகன்
என்கிற ஒரு பிரபல்யத்தால் கவனிப்போம். அவ்வளவே.

பட்டப்படிப்பு
முடிந்து ஒரு நண்பர்கள் குழுவோடு தொலைக்காட்சி தொடர் ஒன்றில் வின்சண்ட் செல்வா
அவர்களிடம் உதவி இயக்குனராக நான் பணியாற்றிய போது நண்பர்களைக் காண அவ்வப்போது
சரவணன் அங்கே வருவார். எதிரில் பார்த்தால் “ஹாய் நிம்மி” என்று சிரித்துவிட்டுப்
போவார். பழக்கம் இல்லை எனிலும் அறிமுகம் இருப்பதற்கே அந்த மரியாதையைத் தருவார்.
சில வருடங்கள் கழித்து
2009இல் ஒரு பொது இடத்தில் பார்த்தபோதும் அதே “ஹாய் நிம்மி
எப்படி இருக்க” என்னும் அன்பான விசாரிப்பு மாறவில்லை.

1999இல் ஓவியர்
ஒருவருடன் எனக்கு திருமணம் முடிந்தது.
2000இல் என் மகள்
பிறந்தாள். அவளும் ஓவியக் கலையில் நாட்டம் கொண்டு குழந்தை பருவத்திலேயே
கண்காட்சிகள் வைப்பது
, ஓவியப் போட்டிகளில் பங்கெடுப்பது
என்றிருந்தாள்.
2006ஆம் ஆண்டு குழந்தைகள் தினத்தன்று அவளுடைய
முதல் தனி ஓவியக் கண்காட்சிக்கு திட்டமிட்டோம். அக்‌ஷரா ஹாசன்
, சுப்புலட்சுமி ஆகியோரை கண்காட்சியைத் தொடங்கி வைக்க அழைத்திருந்தோம்.
ஓவியம் தொடர்பாக வருணாவின் தந்தை நடிகர் சூர்யாவை
, அவரது
தந்தையை அவ்வப்போது சந்திப்பது உண்டு. வருணாவின் ஓவியக் கண்காட்சியில் முடிந்தால்
கலந்து கொண்டு வாழ்த்துமாறு சிறப்பு அழைப்பு விடுத்திருந்தோம். நிகழ்ச்சி
தொடங்கியபோதும் கூட அவர் வருவாரா என்னும் ஐயமே எனக்கு இருந்தது .

காரணமும் இருக்கிறது. ஏனென்றால் உடன் படித்த, நல்ல
பழக்கம் உள்ள ‘பிரபல நடிகர்’ ஒருவரே நம்மை யாரோ போல் பார்த்து தவிர்க்க நினைத்த
சூழலில்
, பழக்கமே இல்லாத ஒருவர் இத்தனை பிரபலமாக இருக்கிறாரே
வருவாரா என்னும் சந்தேகம்!

சூர்யா
விதிவிலக்கானவர். மரியாதை தெரிந்தவர்! நிகழ்ச்சி தொடங்கும் முன் சரியாக வந்து
நின்றார். குழந்தையின் திறன் கண்டு அவ்வளவு மகிழ்ச்சி அவர் முகத்தில். அக்‌ஷரா
, சுப்பு,
யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி யுகி சேது,
கௌதமி என்று அனைவரும் அப்படித்தான் இருந்தார்கள்.

வருணா எல்லோர்
முன்பாகவும் நேரலையாக ஓவியம் வரைந்து காட்டினாள். சிறப்பு விருந்தினர்கள் அனைவரும்
வருணாவை வாழ்த்தி ஊக்குவித்தார்கள். கூடுதலாக சூர்யா அதை அருகில் அமர்ந்து ரசித்து
அந்த கோடுகளுக்குப் பின் இருக்கும் குழந்தையின் மனதை கேட்டு தெரிந்து கொண்டார்.
பின்னர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களைப் பார்வையிட்டவர் திடீரென
ஒரு ஓவியத் தொகுப்பைக் காட்டி “இதை எனக்குக் கொடுப்பியா வருணா” என்க என் மகளுக்கு
ஒன்றுமே புரியவில்லை. பாக்கெட்டில் இருந்து
10,000 எடுத்துக்
கொடுத்து ”இந்த ஓவியம் எனக்கு தான் சரியா” என்று வாங்கிக் கொண்டு “இந்த பணத்துல
சாக்லெட்ஸ் வாங்கி சாப்பிடாம ஆர்ட் மெட்டீரியல்ஸ் வாங்கி இன்னும் நிறைய ஓவியம்
வரையனும்” என்று கொடுத்துவிட்டு
, ஒவ்வொரு ஓவியத்தைப்
பற்றியும் அவளிடம் கேள்வி எழுப்பினார். வருணாவை எங்கே பார்த்தாலும் “என்னா
ஆரிட்ஸ்டு” என்று மாறாத அன்போடு அழைப்பவர். கார்த்தியும் அப்படியே என்பதை வருணா
கூற நான் கேட்டுள்ளேன்.

நிகழ்ச்சி தொடர்பான
பேட்டியில் அவர் கூறியது “நாம் குழந்தைகளின் திறன்களை ஊக்குவிக்க வேண்டும்” (
We have to tap the
potential of the kids) என்றார். குழந்தைகள் உலகோடு தன்னை
ஐக்கியப்படுத்திக் கொள்வது சூர்யாவின் இயல்புகளில் ஒன்று என்பதை நான் அன்று
கண்டேன். பருவத்தே பயிர் செய் என்னும் வாக்குக்கு ஏற்ப குழந்தைகளின் திறனை இளம்
வயதிலேயே கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் குழந்தைகளுக்கு கல்வி
வழங்கும் சேவை நோக்கி அவரை வழிநடத்தியிருக்க வேண்டும். (எனக்கு அவரோடு பழக்கம்
இல்லை!
2010க்குப் பிறகு என் வாழ்க்கைப் பாதையை நான்
மாற்றிக் கொண்டேன்!)

சூர்யா, கார்த்தியின்
படங்களில் பெண்கள் சித்தரிப்பு தொடர்பாக நான் அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளேன்.
குறிப்பாக ஒரு விளம்பரம் தொடர்பாக நான் தொடர் பிரச்சாரமும் மேற்கொண்டேன். சூர்யா
சமூக நீதி தொடர்பாகப் பேசுகையில் கூட இதில் கவனம் செலுத்தும் நீங்கள் சினிமாவில்
பெண்களைப் பயன்படுத்தும் விதத்திலும் கவனம் செலுத்துங்கள் என்று பதிவு
செய்துள்ளேன். சினிமாவில் பெண்கள் சித்தரிப்பு ஆணாதிக்க மனநிலையில் உள்ளதற்கு நாம்
அவர்களை மட்டும் பொறுப்பாக்க இயலாது. எனினும்
, விமர்சனங்கள்
மூலம் கவனத்தை ஈர்க்க முடியும். உயர்நிலையில் கதாநாயக அதிகாரம் இருப்பதால்
உங்களால் முடியாதா என்கிற கேள்வியை எழுப்பி ஏதோ ஒரு மாற்றத்தை நிகழ்த்த முடியும்
என்பதுதான் அந்த விமர்சனத்தின் நோக்கம். அதேவேளை தனிநபர்களாக அவர்களின் சமூக
பங்களிப்புகளில் நியாயம் இருப்பின் அதனை வரவேற்கும் முதிர்ச்சியும்
, குறிவைத்துத் தாக்கப்பட்டால் ஆதரவு தெரிவிக்க வேண்டிய அவசியத்தையும்
உணர்ந்தே இந்த பதிவை எழுதுகிறேன்.

மனிதர்களின்
சிந்தனைகளும்
, செயல்பாடுகளும் காலப் போக்கில் மாறக் கூடியவை. வளர்ச்சி
அடையக் கூடியவை. சூர்யாவின் வளர்ச்சியை திரைத்துறையிலும் சரி
, சமூகத் தளத்திலும் சரி பாசாங்கற்ற உண்மையான பரிணாம வளர்ச்சியாகவே நான்
காண்கிறேன்.

திரைத்துறை
பிரபலங்கள் பெரும்பாலும் ஆளும் கட்சி “ஜால்ராக்களாக’ இருக்கையில் அநீதிகளுக்கு
எதிராக குரல் கொடுக்க துணியும் பிரகாஷ் ராஜ் சூர்யா போன்ற “மைய நீரோட்ட பிரபல’
நடிகர்களின் குரல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர்களின் நற்செயல்களை
வரவேற்போம்… முரண்பாடுகள் தெரியுமெனில் விமர்சிப்போம்…. ஆனால் அரசியல்
உள்நோக்கத்தோடு “வெறுப்பரசியல்’ செய்வதும்
, அவதூறு செய்வதும்
மிகவும் அற்பத்தனமானது. அரசியல் முதிர்ச்சியுமன்று.

சூர்யாவின் அகரம்
ஃபவுண்டேஷனில் படித்த குழந்தைகளின் நாடகத்தை ஒருமுறை காணும் வாய்ப்பு எனக்குக்
கிடைத்தது. பிரபல நடிகர்கள் தங்கள் ‘சேவைகளை’ ஏதேதோ வணிகத் துறைக்கும்
, சர்வதேச
வலைப்பின்னல்களுக்கும் வழங்கிக் கொண்டிருக்க சூர்யா குழந்தைகளுக்குக் கல்வியைக்
கொடுக்க நினைப்பதும்
, தொடர்ந்து அது தொடர்பாக பேசுவதும்
வரவேற்கத்தக்கது. குறிப்பாக பா.ஜ.கவின் புதிய கல்விக் கொகை தொடர்பாக சூர்யா
எழுப்பிய கேள்விகளும்
, விடுத்த அறைகூவலும் போற்றத்தக்கவை.

என் சமகாலத்தில்
என்னுடன் படித்தவர்கள் ‘டாப் ஹீரோக்களாக’
, திரைக் கலைஞர்களாக
இருந்தும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று நான் பார்த்துக்கொண்டுதான்
இருக்கிறேன். அவர்களுக்கு மத்தியில் சூர்யா நிச்சயமாக ஒரு நிஜமான கதாநாயகனாகவே
உயர்ந்து நிற்கிறார்.

Suriya Sivakumar சவால்களும்,
விமர்சனங்களும் ஒன்றும் உங்களுக்குப் புதிதல்ல. அதுதான் உங்களை
வளர்த்துள்ளது… இனியும் வளர்க்கும்… தொடருங்கள் உங்கள் ஆயுத எழுத்தை! ஓங்கி
ஒலிக்கட்டும் அநீதிக்கு எதிரான உங்கள் குரல்! வாழ்த்துகள்
 
😊

(http://artistvarunastudio.blogspot.com/…/…/my-2nd-show.html…

)

#TNStandWithSuriya

 

Previous articleஹிட்லர், முசோலினி வரிசையில் பாஜகவை சேர்த்த மம்தா பானர்ஜி… அவற்றைவிட இந்த ஆட்சி மோசமாம் | BJP government is worst that Hitler, Mussolini’s government – Mamata Banerjee said
Next article8 ஆண்டு பாஜக ஆட்சி.. இந்திய ஜனநாயகத்தை வலிமையாக மாற்றியுள்ளோம் – ஜப்பானில் பிரதமர் மோடி பெருமிதம் | In 8 years Indian democracy strengthened by BJP – Modi in tokyo