நம் எல்லோருக்குமே ஏதாவது ஒரு நிலையில் தயக்கம் இருக்கும். கேட்கலாமா வேண்டாமா? முயற்சிக்கலாமா வேண்டாமா? இதைத் தயக்கம், கூச்சம், தாழ்வுமனப்பான்மை என்று எப்படி வேண்டும் என்றாலும் கூறலாம். Image Credit
சில வருடங்களுக்கு முன்பு மேற்கூறிய எண்ணங்கள் ரொம்ப அதிகம்.
எதற்குத் தயங்குகிறேன் என்றே தெரியாது..! தற்போது யோசித்தால், எதனால் இப்படி இருந்தோம் என்று வெட்கமாக உள்ளது.
சிறுவயதில் இருந்தே கூச்ச சுபாவம், தற்போதும் உள்ளது. எனவே, எதற்கும் கேட்கத் தயங்குவேன். கேட்டால் ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ..! நடக்குமா..! என்று ஏகப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் தோன்றி தடுத்து விடும்.
கேட்டுப் பார்ப்பதில் தவறில்லையே
சம்பவம் நினைவில்லை, எதோ ஒரு விசயத்தில் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்துச் ‘சரி..கேட்டுத்தான் பார்ப்போம்!‘ என்று கேட்டேன், நடந்து விட்டது.
அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. ‘அட! இவ்வளவோ எளிதா.. இது தெரியாம பலவற்றைக் கேட்காமல் விட்டுவிட்டோமே!‘ என்று நினைத்தேன்.
இதன் பிறகு முழுவதும் என்னால் மாற முடியவில்லை என்றாலும், 80% மாறி இருப்பதாக நினைக்கிறேன்.
தற்போது தயக்கம் இன்றிக் கேட்கிறேன். தயக்கம் இருந்தாலும், குறைந்த பட்சம் தாமதமாகவாவது கேட்டு விடுகிறேன்.
இதனால், ஏராளமான பலன்களை, இலாபங்களை அடைந்து விட்டேன்.
இதைத் தற்போது எழுதவும் ஒரு காரணம் உள்ளது.
இத்தளத்தின் Hosting க்கு கடந்த 10 வருடங்களாகப் பணம் கட்டி வருகிறேன். ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பேசித் தள்ளுபடி வாங்கி விடுவேன்.
இந்த முறை அதுபோலக் கொடுக்க முடியாது என்றார்கள், விடாமல் அவர்களிடம் அதே மரியாதையோடு கேட்க, 50% (USD 100) தள்ளுபடி செய்து விட்டார்கள் 🙂 .
ஒரு எடுத்துக்காட்டுக்கு இதைக் கூறினேன், இது போலப் பல சம்பவங்களில் கேட்டு நடந்து இருக்கிறது, இலாபம் அடைந்து இருக்கிறேன், பிரச்சனை சரியாகி இருக்கிறது.
சுருக்கமாக, நாம் நினைக்கும் அளவெல்லாம் மோசமாக நடந்து விடுவதில்லை. முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லை என்பதையே இங்கே கூற வருகிறேன்.
நடக்கிறதோ நடக்கவில்லையா! ஆனால், நடக்கும் என்று நேர்மறையாக முயற்சி செய்தால் பெரும்பாலும் நடக்கிறது. எனவே, கேட்டுப் பார்ப்பதில் தவறில்லையே!
அடுத்த முறை நீங்களும் (நேர்மறை எண்ணத்துடன்) முயற்சித்துப் பாருங்கள்.. கண்டிப்பாக நடக்கும் 🙂 . நம்பிக்கைதானே வாழ்க்கை.
தொடர்புடைய கட்டுரை