Delhi
oi-Vignesh Selvaraj
டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நேற்று விடுதலை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
பேரறிவாளனுக்கு விடுதலை அளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் இருந்த மூத்த நீதிபதி நாகேஸ்வர ராவின் நீதித்துறை அனுபவத்தில் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகியுள்ளது.
4 ஆண்டு விசாரணை… தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்
விரைவில் ஓய்வு பெற இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவின் கடைசி முக்கியமான தீர்ப்பாக இது இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பேரறிவாளன் விடுதலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, 31 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
பேரறிவாளனை விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது. எனவே, விடுதலை கோரும் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த வழக்கில், நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்தது. பேரறிவாளனை, உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

நீதிபதிகள் பெஞ்ச்
நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் தமிழக ஆளுநர் மீது கடுமையான அதிருப்தியை தெரிவித்தது.
161வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால் உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வழிவகுகிக்கும் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. ஆளுநர் முடிவு எடுக்காமல் தாமத்தப்படுதியது தவறு, மாநில அரசு முழுமையாக ஆராய்ந்த பிறகே பேரறிவாளனை விடுவிக்கும் முடிவை எடுத்துள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிபதி நாகேஸ்வர ராவ்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மூவரில் ஒருவரான எல்.நாகேஸ்வர ராவ், ஆந்திர மாநிலம் குண்டூரில் சட்டப்படிப்பை முடித்து 1982 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச பார் கவுன்சிலில் பதிவு செய்தார். ஆந்திரப் பிரதேச மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றிய அவர், 1985 முதல் 1994 வரை ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் பணியாற்றினார்.
கடந்த 2000ஆம் ஆண்டில், ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் 2010 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பணியாற்றியுள்ளார் நாகேஸ்வர ராவ்.

உச்சநீதிமன்ற நீதிபதி
வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2016ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார் நாகேஸ்வர ராவ். வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்களில் இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இவர் ஏழாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாதாடியவர் நாகேஸ்வர ராவ். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நாகேஸ்வர ராவ் 14 நாட்கள் இடைவிடாமல் வாதாடியதால், அவ்வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா நாகேஸ்ராவ் ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது, மீண்டும் நகேஸ்வர ராவ் ஜெயலலிதா தரப்பில் ஆஜரானார்.

தயாநிதி மாறன் வழக்கில்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்காக மட்டுமல்லாமல் அசாம், ஒடிஸா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முன்னாள் முதல்வர்களின் வழக்குகளிலும் ஆஜராகியுள்ளார்.
ஏர்செல்- மேக்ஸிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க எம்.பியுமான தயாநிதி, சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறன் ஆகியோருக்காவும் ஆஜராகியுள்ளார். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்காகவும் ஆஜராகியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நீட் தேர்வு தொடர்பான வழக்கில் தமிழக அரசு மற்றும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி சார்பில் ஆஜரானார்.

ஐ.பி.எல் விசாரணை கமிட்டி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகள் கடுமையாக எழுந்த நிலையில் அதுகுறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட முத்கல் கமிட்டியிலும் நாகேஸ்வர ராவ் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி தீர்ப்பு
உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் ஜூன் 7ஆம் தேதி ஓய்வுபெற இருக்கிறார். இந்நிலையில், அவர் பங்கேற்ற விசாரணைகளில் பேரறிவாளன் விடுதலை வழக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வரும்போதே நீதிபதி நாகேஸ்வர ராவ் தமிழக ஆளுநர் தரப்பை கடுமையாகச் சாடி வந்தார். அவரது தீர்ப்பு ஆளுநர், மத்திய அரசு தரப்புக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் அவர் தீர்ப்பு சொல்ல இயலாத சூழ்நிலையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டதாம்.

தீர்ப்பில் உறுதி
ஆனால், தீர்ப்பளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து நீதிபதி நாகேஸ்வர ராவ், 31 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்து வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னுதாரண தீர்ப்பை வழங்கியுள்ளார். இதன்மூலம் மற்ற 6 பேருக்கும் விடுதலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
English summary
Supreme court judge L Nageswara Rao on Perarivalan case :