மருதத்திணை
06 கிழத்தி கூற்று பத்து
61.
“நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழ
நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழூவுங்
கைவண் மத்தி கழாஅ ரன்ன
நல்லோர் நல்லோர் நாடி
வதுவை யயர விரும்புதி நீயே”
துறை: புணர்ச்சிக்கு வாட்டமுற்ற ஒரு பரத்தையை விட்டு சிலநாள் இருந்து பின் மற்றொரு பரத்தையும் வாட்டமுற வீடு திரும்பிய தலைவன் “இனி இது நிகழாது” என சொல்லியதற்கு தலைவி கூறியது.
விளக்கம்: நறிய பிஞ்சை உடைய மாவினது முற்றி மூக்கூழ்த்து விழும் இனிய பழம் நிறைந்த நீரையுடைய பொய்கையிடத்து துடும் என்னும் ஓசையோடு விழுகின்ற கைவண்மையையுடைய மத்தியினுடைய கழாரென்னும் ஊரை ஒத்த நல்ல பெண்களைத் தேடி மணம் முடித்தற்கு நீ விரும்புவாய்
மாமரம் – தலைவன்; பிஞ்சு – இளம் பரத்தை; பழம் – முதிய பரத்தையர்;
பொய்கை – பரத்தையர் சேரி; துடுமெனல் – அலர் உண்டாதல் எனக் கொள்க.
62.
“இந்திழ விழவிற் பூவி னன்ன
புன்றலைப் பேடை வரிநிழ லகவு
மிவ்வூர் மங்கையர்த் தொகுத்தினி
யெவ்வூர் நின்றன்று மகிழ்ந நின்றரே”
துறை: இதன் துறை விளக்கம் சென்ற செய்யுளுக்குரியதே
விளக்கம்: இந்திரனது விழாக் காலத்திலுள்ள பூப்போலும் புல்லிய தலையையுடைய பறவைப்பேடு அழகிய மரநிழல் இடத்திலிருந்து ஒலிக்கும் இவ்வூரின்கண் உள்ள பெண்களைக் கூட்டி விட்டு இனி எவுவூரிடத்து நின்றது மகிழ்நனே! நினது தேர்.
63.
“பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉ மூர
வெந்நலந் தொலைவ தாயினுந்
துன்னநலம் பெருமபிறர்த் தோய்ந்த மார்ப”
துறை: பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு தலைமகள் வருந்திக் கூறியது.
விளக்கம்: பொய்கையை தனக்கு படுக்கையிடமாக பொருந்திய புலால் மணங்கமழும் நீர் நாயானது, வாளை மீன்களை நாள்தோறும் இரையாக பெறுகிற ஊரனே! எம்மிடத்திலுள்ள எவ்வகை அழகு கெடினும் பரத்தையருடன் சேர்ந்த மார்பை யாம் ஒருபோதும் சேர மாட்டோம்.
64.
“அலமர லாயமோ டமர்துணை தழீஇ
நலமிகு புதுப்புன லாடக் கண்டோ
ரொருவரு மிருவரு மல்லர்
பலரே தெய்யவெம் மறையா தீமே”
துறை: தலைமகன் பரத்தையரோடு புனலாடினான் என்பது அறிந்த தலைமகள் அவன் இல்லாதபோது சொல்லியது.
விளக்கம்: சுழன்று திரியும் தோழியர் கூட்டத்தோடு பொருந்திய பெண்ணோடு கூடி நன்மை மிகுந்த புதுப்புனலை நீயாட கண்டவர் சிலரன்று பலரே.
65.
“கரும்புநடு பாத்தியிற் கலித்த வாம்பல்
கரும்புபசி களையும் பெரும்புன லூர
புதல்வனை யீன்றவென் மேனி
முயங்கன்மோ தெய்யநின் மார்புசிதைப் பதுவே”
துறை: ஆற்றாமை கொண்டிருந்த தலைவனுக்கு தலைவி கூறியது.
விளக்கம்: கரும்பு நட்ட பாத்தியிலே தானே தோன்றி வளர்ந்த ஆம்பலானது, வண்டினது பசியை நீக்குகின்ற நீரை உடைய ஊரனே! புதல்வனைப் பெற்ற என் மேனியை முயங்காதே; அம்முயக்கம் நினது மார்பினது அழகை சிதைப்பதாயிருக்கின்றது
(முயங்குதல் – தழுவுதல்)
66.
“உடலினே னல்லேன் பொய்யா துரைமோ
யாரவண் மகிழ்ந தானே தேரொடு
தளர்நடை புதல்வனை யுள்ளிநின்
வளமனை வருதலும் வௌவி யோளே”
துறை: புதல்வனை பிரியாத. தலைவன் பிரிந்து புறத்து தங்கி வந்தவனாக அவனொடு வெறுத்து தலைவி சொல்லியது.
விளக்கம்: நின் செயல் காரணமாக பகைத்தேன் அல்லேன்; பொய் சொல்லாது உண்மையை உரை; மகிழ்ந! தளர்ந்த நடையுடைய புதல்வனை நினைத்து நினது வளத்தையுடைய மனைக்கு தேரோடும் வருதலை தடுத்தவள் யார் தான்.
67.
“மடவ ளம்மநீ யினிக்கொண் டோளே
தன்னொடு நிகரா வென்னொடு நிகரிப்
பெருநலந் தருக்கு மென்ப விரிமலர்த்
தாதுண் வண்டினும் பலரே
யோதி எண்ணுதல் பசப்பித் தோரே”
துறை: தலைநின்று ஒழுகப்படா பரத்தை புறன் உரைத்தாள் என கேட்ட தலைவி, தலைவன் சார்பாக வந்த வாயில்கள் (தூதுவர்) கேட்க சொல்லியது
விளக்கம்: தலைவனே! நீ இப்பொழுது மணந்து கொண்டவள் மிக மடவள், எதானாலெனில், தன்னோடு ஒப்பாகாத என்னையும் தன்னோடு ஒப்பித்து தன் நலத்தாலே மாறுபடும் என்று கூறுவர்; நீ நேசித்த ஒளியை உடைய நுதலை இன்முகம் காட்டி ஏய்த்தவர்கள் வண்டு தாதை உண்ட மலர்களினும் பார்க்க மிகப் பலர், இதனை அறியாள் போலும்.
68.
“கன்னி விடியற் கணைக்கா லாம்ப
றாமரை போல மலரு மூர
பேணா ளேநின் பெண்டே
யாந்தன் னடங்கவுந் தானடங் கலளே”
துறை: பரத்தை தலைவியை பற்றி புறங்கூறி, தலைவி புறங் கூறினாளென பிறருக்கு கூறியதை கேட்ட தலைவி தலைவனுக்கு சொல்லியது.
விளக்கம்: இருள் முழுவதும் கெடாத விடியற்காலத்தே திரண்ட தண்டை உடைய ஆம்பல் தாமரைப் போல மலர்ந்திருக்கின்ற ஊரனே! நினது பெண்ணானவள் இதனை விரும்பி உட்கொள்ளாளோ, அது யாதெனில், நாம் அடங்க வேண்டும் தன்னைப் போன்று அடங்கவும் தான் அடங்குகின்றாள் இல்லை
69.
“கண்டனெ மல்லமோ மகிழ்நநின் பெண்டே
பலராடு பெருந்துறை மலரொடு வந்த
தண்புனல் வண்ட லுய்த்தென
வுண்கண் சிவப்ப வழுதுநின் றோளே”
துறை: தலைவன் பொதும்பை பருவத்து பரத்தையை களவு மணத்தில் மணந்து ஒழுகுவதை அறிந்த தலைவி சொல்லியது
விளக்கம்: மகிழ்நனே! நின் பெண்டை காணாதிருந்தோம் அல்ல;அவள் யார் என்றால், பலரும் வந்து நீராடுகின்ற பெருந்துறையில் மலரோடு பெருகி வந்த குளிர்ந்த நீர் வண்டல் மனையை (மணலில் கட்டிய சிறுவீடு) சிதைத்ததாக மையூட்டிய கண்கள் சிவப்படைய அழுது நின்றாள்.
(பெதும்பை பருவம் – மகளிர்க்கு 8 முதல் 11 வயதுடைய பருவம்)
70.
“பழனப் பன்மீன் னருந்த நாரை
கழனி மருதின் சென்னிச் சேக்கு
மாநீர் பொய்கை யாண ரூர
தூயர் நறியர்நின் பெண்டிர்
பேஎ யனையமியாம் செய்பயந் தனமே”
துறை: பரத்தையரோடு பொழுது போக்கி நீண்ட நாள் துய்த்து வந்த தலைவனிடம் தலைவி வெறுத்து சொல்லியது.
விளக்கம்: வயலிடத்தில் பலவகை மீன்களை உண்ணும் நாரை கழனியின் மருத மரத்தின் கண் தங்குகின்ற நீர் பொருந்திய பெரிய பொய்கையை உடைய புது வருவாயை உடைய ஊரனே! நினது பெண்டீர் அழுக்கற்றவரும் நல்ல வாசனை உடையவரும் ஆவர்; யாமோ பேயை ஒத்தோம், அன்றிக் குழந்தையையும் பெற்றுக் கொண்டோம். ஆதலால் எம்மட்டும் இந்த இளமை நின்று இராது – ainkurunuru padal vilakkam 7.
– மா கோமகன்
