Chennai
oi-Shyamsundar I
சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று ஊட்டிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள நிலையில்.. இந்த பயணம் திட்டமிடப்பட்டு இருக்கும் நேரம்தான் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
எல்லா சாலையும் ரோமை நோக்கியே செல்கிறது என்பார்கள்.. இப்போது தமிழ்நாடு அரசியலை எடுத்துக்கொண்டால்.. எல்லா சாலையும் ஊட்டியை நோக்கித்தான் செல்கிறது என்று கூற வேண்டும்.
ஆம் முக்கியமான அரசியல் தலைகள் ஊட்டியில் முகாமிட்டு வருவது பல்வேறு கேள்விகளை, விவாதங்களை எழுப்பி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தற்போது கோவையில் இருக்கிறார்.
ஸ்டாலின் ரூமில் காலடிவைத்த ஓபிஎஸ் மகன்.. முதல்வரை தனியாக சந்தித்த ரவீந்திரநாத்.. என்ன காரணம்?

கோவை பயணம்
நேற்று மாலை கோவைக்கு சென்றவர்.. இன்று பிற்பகல் கோவையில் இருந்து ஊட்டிக்கு செல்கிறார். கோவையில் இருந்து சாலை மார்க்கமாக அவர் காரில் ஊட்டி செல்கிறார். குன்னுார் பகுதிகளில் அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது. நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். முக்கியமாக தாவரவியல் பூங்கா கண்காட்சியை நாளை முதல்வர் தொடங்குகிறார்.

ஸ்டாலின் கோவை
அதேபோல் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குகிறார். பின்னர் ஊட்டி உருவாக காரணமாக இருந்த ஜான் சல்லிவன் சிலையை திறந்து வைக்கிறார். ஆனால் முதல்வரின் ஊட்டி பயணம் கவனம்பெற காரணமே வேறு என்று கூறுகிறார்கள் அரசியல் தரப்பினர். முதல்வர் ஸ்டாலின் ஊட்டி போகும் அதே நேரத்தில்தான் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஊட்டியில் தங்கி இருக்கிறார். குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொள்ள இருக்கிறார்.

வெங்கையா நாயுடு ஊட்டி
இதற்காக அவர் ஊட்டி பயணம் மேற்கொண்டுள்ளார். ஊட்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகையில்தான் அவர் தங்கி இருக்கிறார். நேற்று அங்கு வந்த வெங்கையா நாயுடுவை நீலகிரி எம்பி ஆ. ராசா நேற்று அவரை நேரில் சென்று சந்தித்தார். இந்த நிலையில்தான் ஊட்டி செல்லும் முதல்வர் ஸ்டாலின் வெங்கையா நாயுடுவை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் வெங்கையா நாயுடு முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.

சந்தித்த ஆ. ராசா
பாஜக தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதில் எப்படியாவது எதிர்க்கட்சிகள் ஏற்க கூடிய பொது வேட்பாளரை நிறுத்தி குடியரசுத் தலைவராக வெற்றிபெற வைத்து விட வேண்டும் என்று திட்டத்தில் பாஜக இருக்கிறது. தென்னிந்திய கட்சிகளின் ஆதரவை பெறும் வகையில், பாஜக சார்பாக துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு குடியரசுத் தலைவர் வேட்பாளராக வாய்ப்புகளும் உள்ளன. இதை கருத்தில் கொண்டே வெங்கையா நாயுடு முதல்வரை சந்தித்தார் என்று கூறப்பட்டது.

கருணாநிதி சிலை
இது போக ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வரும் 28ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இதையும் வெங்கையா நாயுடுதான் திறந்து வைக்க உள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வெங்கையா நாயுடு போட்டியிட்டால் அவரை திமுக ஆதரிக்கும் என்பதற்கான சிக்னலாக இது பார்க்கப்படுகிறது. இரண்டு தரப்பும் நெருக்கமாகிறது என்பதற்கான அறிகுறியாக இது பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஒரே நேரத்தில் ஊட்டியில் முதல்வர் ஸ்டாலினும், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் முகாமிடுவது அரசியல் வட்டாரத்தில் கேள்விகளை எழுப்பி உள்ளது. அப்போ வெங்கையா நாயுடுவுக்கு திமுகவின் ஆதரவு கன்பார்மா என்ற கேள்வி எழுந்துள்ளது.
English summary
Why Venkaiah Naidu and CM Stalin are camping in Ooty? Something is brewing in tea town? முதல்வர் ஸ்டாலின் இன்று ஊட்டிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ள நிலையில்.. இந்த பயணம் திட்டமிடப்பட்டு இருக்கும் நேரம்தான் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
Story first published: Thursday, May 19, 2022, 8:44 [IST]