என் குழந்தை பருவத்திலிருந்து நான் கடைசியாக
இந்த வேலையே வேணாம் “மானத்தோட” பொழைச்சா போதும் என்று முடிவெடுத்து என் வேலையை
ராஜினாமா செய்த
42,43 வயது
வரை நான் ஏதோ ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டே தான்
இருந்தேன். (வேலையிடத்தில் நீ கொற்றவையா என்றா பார்க்கப் போகிறார்கள்
? அங்கு நான் வெறும் கூலிக்கு என் உழைப்புச் சக்தியை விற்க வந்த ஒரு பண்டம்…
அவ்வளவே).

 

எனக்கு 10,11 வயது இருக்கும் போது என் நெருங்கிய உறவினர்
ஒருவரால் நான் மிகவும் மோசமான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். அந்த உறவினரை
நான் திருமணத்திற்கு அழைக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இருந்தேன். காரணம்
“உறவுகளை” விட்டுக்கொடுக்க இயலாது என்னும் “குடும்ப விதி”.

 

அம்மா அப்பா கடுமையான உழைப்பாளிகள். படிப்பு
சொல்லிக் கொடுக்க நேரமில்லை.
13
வயது வரை நான் அவர்கள் வீட்டிலிருந்து படிக்க வேண்டிய நிலை! ஒரு கட்டத்திற்கு
மேல் என்னால் போக இயலாது என்று சொல்லி நின்று விட்டேன் . அந்தாளுக்கு வெவ்வேறு
காலகட்டத்தில் வெவ்வேறு காரணத்தினால் வன்மம் பெருகியது . ஒரு கட்டத்தில் என்னை
“தேவடியா” என்று திட்டி ஃபோனை வைத்தான்.

என் திருமணத்திற்கு வந்த அந்த ஆளை நான்
மதிக்கவில்லை என்பதால் என் திருமணத்தின் போது அவரின் மனைவி பெரிய தகராறு செய்தார்.
24 வயது
அப்போது. உண்மையான காரணத்தை அப்போதும் என்னால் சொல்ல இயலவில்லை. அதற்கு பதிலாக
அவர் என்னை வசைபாடினார்.. தப்பாக பேசினார் என்று சொல்லி சமாளித்தேன்.

 

எனக்கு மகள் பிறந்த பின் ஒரு நாள் அந்த ஆளின்
தங்கை எனை காண வந்தார். ஏன் என் அண்ணனை நீ மரியாதை இல்லாம நடத்துற என்றார் “உன்
அண்ணன் என்னை
xxxx” பண்ணப்
பார்த்தான் என்றேன். அதிர்ந்து போனவர் அந்தாளின் மனைவியிடம் அதை சொல்லிவிட… அவர்
எனக்கு ஃபோன் செய்து ஏன் அப்படி சொன்ன என்றாரே தவிர “உன்னை அந்தாளு அப்படி
துனுபுறுத்தினாரா” என்று வருத்தப்படவில்லை.

 

அதையும் விட அவலம் என்னவெனில், “அவரு நான்னு நினைச்சு உன்
பக்கத்துல வந்து படுத்திருக்கலாம்ல” என்றார் அந்த பெண்! மீண்டும் சொல்கிறேன் –
‘விட்டுக்கொடுக்க இயலாத உறவுமுறை’… அந்த பதில் என்னை உலுக்கிப் போட்டது. தொட்டிலில்
உறங்கிக் கொண்டிருந்த ஒரு வயது கூட ஆகாத என் குழந்தையை நினைத்து நான் பயந்து
போனேன்… இந்த உலகில் இந்த குழந்தை எப்படி வாழப் போகிறதென்று.

 

என்னை பாலியல் ரீதியாக சிறுமியாக இருந்த போதே
துன்புறுத்தியவரை நான் என் திருமணத்திற்கு அழைத்தேன். அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம்
வாங்கினேன். அந்த பெண்ணின் தகராரால் நான் அவரை “வாங்க” என்று அழைத்தேன்… அதன்
பின்னர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நான் அவர்களிடம் உறவு பாராட்ட வேண்டிய நிலையில்
தான் இருந்தேன். ஒரு காலகட்டம் வரை… எந்த உறவும் வேண்டாம் என்று நான் முடிவெடுத்து
ஒதுங்கும் வரை…

 

அன்று எனக்கு பென்ணியம் மார்க்சியம் ஒரு
மண்ணாங்கட்டியும் தெரியாது அன்றும் என்னால் அவரை பற்றி வெளியே பேச முடியவில்லை.
இதோ இன்று கொற்றவையாகி
, பெண்
விடுதலை
, சமூக விடுதலை என்று கொக்கறித்துக் கொண்டிருக்கும்
போதும் அந்த ஆளைப் பற்றி என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை. ஒருமுறை ஒரு
தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக இந்த கதையை நான் சொன்னேன். யார் அந்த உறவினர் என்னும்
விவரங்களோடு. பின்னர் ஐயோ அந்த குடும்பம் பாதிக்கப்படுமே
, அவரது
பிள்ளைகள் இதை தாங்குவார்களா என்று யோசித்து எனது பேட்டியை நீங்கள் ஒளிபரப்பக்
கூடாது என்று மெயில் போட்டேன். இன்று அந்தாள் பேரன் பேத்தியும் எடுத்துவிட்டார்.

 

இதுதான் பெண்களின் நிலை! இதுபோல் எண்ணற்ற
‘கதைகள்’ உள்ளன. பாலியல் துன்புறுத்துலுக்கு உள்ளானதை சம்பந்தப்பட்ட “இணையிடம்”
சொன்னால் அவர்கள் எப்படி என்னையே குற்றவாளி ஆக்கி அவமானப்டுபடுத்தினார்கள் என்று
இன்னும் நிறைய கதைகள் உள்ளன. வேறொரு சந்தர்ப்பத்தில் பேசுகிறேன்.

 

ஆனால் இந்த அனுபவங்கள் எல்லாம் சேர்ந்துதான்
பெண்ணின் நிலை குறித்து என்னை ஆய்வு செய்ய தூண்டியது. வசுமித்ர மார்க்சியம்
என்னும் ஒளிவிளக்கை என் கையில் கொடுத்தான். அது எனக்கு மன விடுதலையை வழங்கியது. ஆனால்
என் விடுதலை என்பது சமூக விடுதலையோடு தொடர்புடையது என்னும் புரிதலையும் வழங்கியது.
அதனால் தான் இந்த ஊடகத்தில் பலவித பொய்யான
, வக்கிரமான Verbal Abuses களுக்கு
மத்தியில் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறேன். மேலும் உக்கிரமாக!

 

உறவினரை அழைப்பதும், வைரமுத்துவை அழைப்பதும் ஒன்றா
என்று இதைக் கொண்டு “ஆம்பிளைத்தனமான” (ஆண்
, பெண் இருவரும்)
அறிவுஜீவிகள் கேட்பார்கள். அதற்கான நிர்பந்தமோ சூழ்நிலையோ என்னவென்று நமக்கு
தெரியாது. அல்லது அன்றைக்கு அவருக்கு அந்த மனிதரின் அங்கீகாரம் தேவையாக கூட
இருந்திருக்கலாம்…அல்லது அவரை அழைக்காமல் போனால் யார் யாருக்கு பதில் சொல்ல
வேண்டியிருக்குமோ… திருமணத்தின் போது பிரச்சினைகள் வேண்டாம் என்று எது
வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம் .. ஆனால் பெண்கள் வாய் திறந்து பேசும்போது
“வாட் அபௌட்டரியை” கையாள்வது மிக மிக கேவலமான விசயம்.

 

பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாக
சுரண்டப்படுகிறோம் என்பதை உணரவே வெகு காலமாகிவிடும். அதை உணர்ந்த பின் அதை
வெளியில் சொல்ல பல விசயங்களை யோசிக்க வேண்டும்.. எல்லாவற்றுக்கும் மேலாக இங்கே பல
நீதிமான்கள் பல விதமான “சி.ஐ.டி.த்தனமான” கேள்விகள் கேட்கிறார்கள். அதில் அதில்
தெரிவதெல்லாம் ஆணாதிக்க மனம்
,
அதற்கு தமிழர், ஆரியம், திராவிடம்
என்று சாயம் பூசிக்கொள்கிறார்கள்.

 

வழக்கு போடுங்கள் வழக்கு போடுங்கள்
என்கிறார்களே.. பாலியல் துன்புறுத்தல் பற்றிய வழக்கில் எப்படிப்பட்ட கேள்விகள்
கேட்கப்படும்
, எப்படிப்பட்ட
நியாயங்கள் நமக்கு கிடைத்துள்ளது என்பது தெரியாதா
? பிங்
மாதிரியான படங்களைப் பார்த்து கைத் தட்டும் நபர்கள் நிஜ வாழ்வில் ஒரு பெண் பாலியல்
குற்றம் சாட்டினால் எப்படி பேசுகிறார்கள். இதுதான் இச்சமூகத்தின்
HYPOCRICY.

 

ஆண்கள் வேட்டையாடிக் கொண்டே இருப்பார்கள்…
பெண்கள் தங்கள் நியாயத்திற்காக போராடிக் கொண்டே இருக்க வேண்டும் அல்லது தப்பித்து
ஓடிக் கொண்டே இருக்க வேண்டுமா
?
என்ன நியாயமிது?

ஒரு பாலியல் துன்புறுத்துலுக்கோ அல்லது ஏதோ ஒரு
வன்கொடுமைக்கு உள்ளான ஒருவருக்கு முதலில் தேவைப்படுவது
EMPATHY. பாலியல் வன்முறையில்
பாதிக்கப்பட்டவர் பெரும்பாலும் பெண்ணாக இருக்கிறார் ஏனென்றால் இது ஆணாதிக்க சமூகம்
என்னும் போது ஆண்களுக்கே இங்கே அதிகாரம் உள்ளது. ஆணாதிக்க மூளை சலவைக்கு உள்ளான
பெண்களும் சேர்ந்து பெண்களை குற்றவாளிகளாக்கிக் கொண்டிருக்கும் சூழலில் பெண்கள்
தங்களுக்கு நேரும் அவலங்களை வெளியில் சொல்ல முடிவதில்லை என்பதே யதார்த்தம். இதை
சற்று மனதில் வைத்துக் கொண்டு எந்த ஒரு பாலியல் குற்றச்சாட்டையும் அனுக வேண்டும்.
இல்லையேல் உங்களிடம் வெளிப்படுவது “நியாயவாதம்” அல்ல “அறியாமை” அல்லது “ஆணாதிக்க
வக்கிரம்”.

 

அவளே ஒரு விபச்சாரி… அவ
சொல்றதெல்லாம் கேட்டுக்கிட்டு” என்று பேசுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
பாலியல் தொழிலாளிக்கும் பாதுகாப்பாக
, கண்ணியமாக நடத்தப்பட
வேண்டும் என்னும் உரிமைகள் உண்டு. அதோடு விபச்சாரம் ஏன் நிலவுகிறது என்பதே இதில்
கேள்வியாக இருக்க வேண்டும்! அதை வைத்தாவது ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாலியல்
சலுகை மற்றும் அதிகாரம் குறித்து சிந்திக்க பழகுங்கள்…

இதோ இந்த பதிவை எழுதிவிட்டு… என்னுடைய இந்த
பதிவு என் மகளின் வாழ்வை பாதிக்குமோ என்று நானும் உள்ளே அச்சப்பட்டுக்கொண்டு தான்
இருக்கிறேன்…. இன்னுமா உங்களுக்கெல்லாம் புரியவில்லை!

 

Previous articleSri Satya Varadharaja Perumal Temple – Arumbakkam / ஸ்ரீ சத்யவரதராஜ பெருமாள் கோயில்
Next articleபஜாஜ் அவென்ஜெர் க்ரூஸ் 220 & ஸ்ட்ரீட் 160 பிஎஸ்6 மாடல் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்…!