Coimbatore
oi-Arsath Kan
கோவை: கோவையில் தொல்பொருட்கள் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
கீழடி, கொற்கை, கங்கைகொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை என எங்கும் அலையாமல் ஒரே இடத்தில் தமிழகம் முழுவதும் அகழாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்தி கோவை மக்களுக்கு பரிசு கொடுத்துள்ளார் முதல்வர்.
பியூஷ் கோயலுக்கு போனை போடுங்க! ஆன் தி ஸ்பாட்டில் அசத்திய முதல்வர் ஸ்டாலின்! என்ன விவரம்?

தொல்பொருள் கண்காட்சி
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் மற்றும் அவற்றின் மாதிரிகளின் கண்காட்சி மற்றும் தமிழ்நாடு அரசு ஓராண்டில் ஆற்றிய அரும்பணிகளின் தொகுப்பு ஓவிய வடிவ
கண்காட்சியை கோவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொல்லியல் துறை
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இவ்வாண்டில் சிவகங்கை மாவட்டம் – கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம் மற்றும் மணலூர், தூத்துக்குடி மாவட்டம் – சிவகளை, அரியலூர் மாவட்டம் – கங்கைகொண்டசோழபுரம்,
– கிருஷ்ணகிரி மாவட்டம் – மயிலாடும்பாறை, விருதுநகர் மாவட்டம் – வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் – துளுக்கார்பட்டி, தர்மபுரி மாவட்டம் – பெரும்பாலை ஆகிய ஏழு இடங்களில் அகழாய்வு மேற்கொண்டு வருகிறது.

கீழடி பொட்கள்
கீழடியில் புதைந்துள்ள கட்டடப் பகுதிகளையும், அரும்பொருட்களையும் வெளிக்கொணரும் வகையில் பெரும்பரப்பு அகழாய்வு நேர்த்தியுடன் நடந்து வருகிறது. இந்த அகழாய்வில் கிடைக்கப்பெற்றுள்ள சான்றுகளின் மூலம் வைகை
நதிக்கரையில் நகரமயமாதல் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் தொடங்குகிறது என்பது தெளிவாகிறது. இவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழர்களின் எழுத்தறிவு, வேளாண்மை, நீர் மேலாண்மை, கட்டடத் தொழில்நுட்பம் போன்ற
தலைப்புகளின் கீழ், கீழடியில் கழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்களின் மாதிரிகள் மற்றும் அவற்றின் புகைப்படங்கள் இக்கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சிவகளை அகழாய்வு
சிவகளை வாழ்விடப்பகுதி அகழாய்வில் கிடைக்கப்பெற்ற ‘ஆதன்’ என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, கீழடியில் ஆதன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட பானை ஓட்டினை நினைவூட்டுகிறது. சிவகளையில் கிடைக்கப் பெற்ற கருப்பு-சிவப்பு வண்ணக் கலயங்கள், குடுவைகள், பானை மூடிகள் போன்றவற்றில் அழகிய வடிவமைப்பில்
வரையப்பெற்றுள்ள வெள்ளை வண்ண வேலைப்பாடுகளை நோக்கும்போது சிவகளைப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ச் சமூகம் மிகப் பழமையானதாகக் கருதப்படுகிறது.

கொற்கை அகழாய்வு
தமிழகம் மேலை நாட்டினருடனும், கீழை நாட்டினருடனும், இந்தியாவின் பிற பகுதிகளுடனும் கி.மு. எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே வணிகத் தொடர்பு கொண்டிருந்ததை கொற்கை அகழாய்வின் காலக் கணக்கீடு உறுதி செய்துள்ளது.
இவ்வகழாய்வில் கிடைக்கப்பெற்றுள்ள சதுர வடிவிலான செங்கல் கட்டுமானம் மற்றும் துளையுடன் கூடிய வடிகட்டும் குழாய் போன்றவற்றின் மாதிரிகள் மற்றும் அவற்றின் புகைப்படங்கள் இக்கண்காட்சியில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் முக்கிய நோக்கம்
இப்பகுதியின் தொடக்க காலக் குடியேற்றத்தை அறிந்துகொள்வதும், ஈமக்காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள அக்கால மக்களின் வாழ்விடங்களை அடையாளம் காண்பதே ஆகும். தற்போதைய அகழ்வாராய்ச்சியானது நீண்டகாலக் கேள்விக்கு விடையளிக்கும் வகையில் ஆதிச்சநல்லூரின் பழங்கால வாழ்விடங்களை தொல்லியல் சான்றுகளின் மூலம் அடையாளப்படுத்தியுள்ளது. இக்கண்காட்சியில் இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்களின் மாதிரிகள்
மற்றும் அவற்றின் புகைப்படங்கள் மக்களின் பார்வைக்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மயிலாடும்பாறை
மயிலாடும்பாறை கரிம மாதிரிகளின் ஏ.எம்.எஸ். (AMS) அறிவியல் முறையில் காலக் கணக்கீடு செய்யப்பட்டதில் சுமார் 4200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு காலப் பண்பாடு நிலவியது என உறுதி செய்யப்பட்டுள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பண்பாட்டு பொருட்கள் வாயிலாக இப்பகுதி புதிய கற்காலம் முதல் வரலாற்றுக் காலம் வரை தொடர்ந்து வாழ்விடமாக இருந்துள்ளதையும்
அறியமுடிகிறது. இக்கண்காட்சி அரங்கில், மயிலாடும்பாறை அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களான ஈட்டி முனைகள், அம்பு முனைகள், இரும்பினால் ஆன கத்திகள், கோடரி, ஈமச் சின்னங்களில் வைக்கப்படும் படையல் பொருட்கள், மூன்றுகால் குடுவை உள்ளிட்ட பானைகள், கிண்ணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கொடுமணல்
கொடுமணல் அகழாய்வில் கற்குவை, கற்பதுகை, முதுமக்கள் தாழி, மற்றும் நெடுங்கல் போன்றவற்றை உள்ளடக்கிய சுமார் 200-க்கும் மேற்பட்ட ஈமச்சின்னங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறிப்பாக 2020-21 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், இரண்டு பக்கங்களிலிருந்து ஏறி இறங்கும்
வகையில் பலகை கற்களைக் கொண்டு அமையப்பெற்ற படிகளுடன் இருபக்கமும் கற்களால் ஆன பக்கவாட்டு சுவர்களுடன் கூடிய கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் மற்றும் அவற்றின் புகைப்படங்கள் மக்களின் பார்வைக்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
English summary
CM Stalin has inaugurated the Archaeological inventions Exhibition inCoimbatore today
Story first published: Thursday, May 19, 2022, 13:14 [IST]