Erode
oi-Mathivanan Maran
ஈரோடு: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் மொடக்குறிச்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை நேரில் சந்தித்தார். இச்சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன், இன்று எங்களது இல்லத்திற்கு 32 வருடங்களுக்கு பின்னர் வந்த எங்களது பிள்ளை !!! என நெகிழ்ந்து எழுதியுள்ளார்.
குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு என்ன சொல்ல போறீங்க? செய்தியாளர் கேள்வி! பேரறிவாளன் உருக்கமான பதில்

உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இடதுசாரி தலைவர்கள் உள்ளிட்டோரை சந்தித்தார் பேரறிவாளன்.

இதேபோல் சேலம் மேட்டூரில் திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் கொளத்தூர் தா.செ.மணி, சேலத்தில் திமுக எம்.எல்.ஏவும் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், கோவையில் திராவிடர் இயக்க இரட்டையர்களான கோவை ராமகிருட்டிணன்- ஆறுச்சாமி உள்ளிட்டோரை பேரறிவாளன் சந்தித்தார்.

மேலும் மொடக்குறிச்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் வீட்டுக்கும் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன், இன்று எங்களது இல்லத்திற்கு 32 வருடங்களுக்கு பின்னர் வந்த எங்களது பிள்ளை !!! என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.

திராவிட இயக்கத்தினர் மற்றும் திமுகவினரால் வாஞ்சையுடன் சுப்பு அக்கா என அழைக்கப்படுவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உதவியதாக தடா சட்டத்தின் கீழ் கணவருடன் கைது செய்யப்பட்டு 8 மாதம் சிறை தண்டனை அனுபவித்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். 1977-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசன் பின்னர் திமுகவில் இணைந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசில் அமைச்சராகவும் பின்னர் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர் சுப்புலட்சுமி ஜெகதீசன் எனும் சுப்பு அக்கா.
English summary
Pearivalan met DMK Deputy General Secretary subbulakshmi jagadeesan.
Story first published: Sunday, May 22, 2022, 7:51 [IST]