உண்மை பேசுவது கடினமா?

ண்மை பேசுவது கடினமா? என்ற கேள்வி பலருக்கு தோன்றி இருக்கும். பலர் அதை முயன்று இருக்கவே மாட்டார்கள். Image Credit

பொய் கூறுவது

சின்ன விஷயமோ பெரிய விஷயமோ எதற்காக இருந்தாலும் நாம் அனைவருமே பொய் கூறுவது இயல்பாகி விட்டது.

அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம், அதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட நியாயம் கூட இருக்கும்.

ஒரு நாளில் பல்வேறு நேரங்களில் பல்வேறு விஷயங்களுக்காக விருப்பப்பட்டோ அல்லது விருப்பப்படாமலோ பொய் கூற வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பொய் என்பது வாழ்வில் இயல்பான ஒரு நடவடிக்கையாகி விட்டது.

கண்ணதாசன்

பொய் கூறுவதை எனக்குத் தவிர்க்க வேண்டும் என்று முன்பு தோன்றியதே கிடையாது. ஏனென்றால், அது தவறு என்ற எண்ணமே வந்தது இல்லை.

ஆனால், அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகம் படித்த பிறகு, அதில் கண்ணதாசன் அவர்கள் இரகசியமில்லா வாழ்க்கை பற்றி விளக்கி இருந்தது மிகக்கவர்ந்தது.

அதாவது, இரகசியமே இல்லையென்றால், அது எப்படிப்பட்ட அற்புதமான வாழ்க்கை என்பதைப் பற்றி விளக்கியிருந்தார்.

யாருக்காகவும் பயப்படவேண்டியதில்லை, இவருக்குத் தெரிந்து விடுமோ என்ற யோசனையில்லை, தெரிந்து விட்டால் பிரச்சனையாகுமோ என்ற கவலையில்லை.

கண்ணதாசன் கூறியது ரொம்பப் பிடித்தது. படித்ததோடு கடந்து விடாமல் பின்பற்றிப்பார்ப்போம் என்று முயற்சித்தேன்.

இதையொட்டியே என் நடவடிக்கைகளையும், பேச்சையும் அமைத்துக்கொண்டேன்.

துவக்கத்தில் சிரமமாக இருந்தாலும், முன்பே என்னையறியாமலே சிலவற்றைப் பின்பற்றி வந்ததால், இதன் படி மாறுவது கடினமாக இல்லை.

எதையும் யாருக்காகவும் மறைக்க வேண்டியதில்லை, இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்ற உணர்வு அற்புதமாக இருந்தது.

அப்படியென்றால் தனிப்பட்ட விவரங்களையும் வெளிப்படையாக வைத்துக்கொள்வீர்களா? என்று கேட்காதீர்கள் 🙂 .

அது இரகசியமல்ல, பாதுகாப்பு. இரண்டும் வெவ்வேறு.

குடும்பத்திலும், நண்பர்களிடத்தும் பெரும்பாலும் மறைத்தது இல்லை. எனவே, எங்கே உள்ளேன், என்ன செய்வேன் என்று அனைவரும் எளிதாக ஊகிக்க முடியும்.

எப்படி முடிவு எடுப்பேன் என்று என்னை அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.

இரகசியமாக வைத்துக்கொள்வது ஒன்று மட்டுமே! என்னிடம் ஒரு விஷயத்தைக் கூறி, இதை மற்றவரிடம் கூறாதீர்கள் என்றால் கூற மாட்டேன்.

உண்மை பேசுவது கடினமா?

இல்லை என்பதே என் பதில்.

இரகசியமே இல்லாமல் இருப்பது பழகியவுடன், உண்மையை மட்டுமே பேச முயற்சித்தால் என்ன என்று தோன்றியது ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை.

காரணம், தேவையற்ற பிரச்சனைகளைக் கொண்டு வந்தது.

எனவே, கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டு பெரும்பாலும் பொய் சொல்லாமல் தவிர்க்கிறேன் ஆனால், முழுவதும் முடியவில்லை, அது முடியும் என்று தோன்றவும் இல்லை. 

அந்த அளவுக்குப் போகும் எண்ணமும் எனக்கில்லை 🙂 .

இவ்வாறு மாறிய பிறகு நெருக்கடியாகும் என நினைத்த பல சம்பவங்கள் ஒன்றும் இல்லாமல் ஆனது வியப்பையளித்தது.

இதற்குப் பொருத்தமான நடந்த உண்மை சம்பவத்தைக் கூறலாம் ஆனால், தனிப்பட்ட விவரங்களையும் பகிர வேண்டியதாக உள்ளதால் கூற முடியவில்லை.

தற்போது ஏதாவது பொய் கூறினால், இதைக்கூறாமல் இருக்கலாமே! என்ன நடந்து விடப்போகிறது?! என்ற எண்ணமே தோன்றுகிறது.

நேர்மையாக இருக்க முடிந்தாலும், உண்மை மட்டுமே பேசுவது எளிதாக இல்லை ஆனால், எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் முயற்சிப்பதை வழக்கமாக்கியுள்ளேன்.

மனசாட்சிக்கு மிகப்பயப்படுவேன் அதனாலும் மேற்கூறியவற்றைப் பின்பற்றுவது எனக்கு எளிதாக இருந்து இருக்கலாம்.

உண்மை பேசினால் ஒரு பெரிய வசதி எதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. கூகுளால் ஏற்படும் மறதிக்கு எனக்கு இது வசதியாக உள்ளது 🙂 .

புத்தகம் படித்ததால் பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வர முடிந்ததோடு இம்மாற்றங்கள் பலனளித்து உதவுகிறது என்பதே முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியது.

அனுபவங்களால் நம் தவறுகளைத் திருத்திக்கொள்ள முடிவது போல, புத்தகங்களைப் படிப்பதால் சில தவறுகளை உணர முடியும்.

உணருவது பெரிய சாதனையல்ல, உணர்ந்ததைப் பின்பற்றி நாம் நம்மை மாற்றிக்கொள்கிறோமா என்பதே முக்கியம்.

எனவே, சிலவற்றை முடியாது என்று முயற்சிக்காமலே இருக்காதீர்கள். முயற்சித்துப்பாருங்கள், அற்புதங்களைக் காணலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

புத்தகம் படிப்பதால் பயன் உண்டா?

நேரம் சரியில்லையென்றால் என்ன செய்வது?

அடுத்தவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்?

செய்த தவறுக்காக வருந்துகிறீர்களா?!

அர்த்தமுள்ள இந்து மதம்

Previous articleBest Paneer Tikka Masala Recipe
Next articleசண்டை போடாதீங்க சிறுகதை | தி.வள்ளி சிறுகதை