Srilanka
oi-Noorul Ahamed Jahaber Ali
கொழும்பு: பெட்ரோல் இல்லை எனக் கூறி பெட்ரோல் பங்கு உரிமையாளரின் வீட்டுக்கு கும்பல் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியாகி இருக்கிறது.
விரைவில் பொதுசிவில் சட்டம்.. மற்ற மாநிலங்களும் இதை பின்பற்றனும் – உத்தராகண்ட் முதலமைச்சர்

பொருளாதார கொள்கை
இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாகக்கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட பணம் இன்றி அந்நாட்டு அரசு தத்தளித்து வருகிறது.

வன்முறை
இது ஒருபுறம் இருக்க இலங்கையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் ராஜபக்ஷேவின் கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொதித்து எழுந்த இலங்கை மக்கள் பதில் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியதால் இலங்கையின் பல நகரங்கள் கலவரமயமாகின.

மகிந்த ராஜினாமா
நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷே பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து தலைமறைவாகினார். பொதுமக்கள் ராஜபக்ஷேவின் வீடுகள், அவரது பெற்றோரின் கல்லரைகள், சொத்துக்களை தீக்கிரையாக்கினர். மேலும் அவரது கட்சி அமைச்சர்களின் சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டன. பொதுமக்களின் எழுச்சியால் தப்பிச்சென்ற மகிந்த ராஜபக்ஷே இலங்கை திரிகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கினார்.

ரணில் விக்ரமசிங்கே
இதனை தொடர்ந்து இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக பதவியேற்குமாறு அழைப்பு விடுத்தார் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷே. பல்வேறு நிபந்தனைகளுடன் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்று இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியையும், வன்முறை சம்பவங்களையும் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

பெட்ரோல் பங்கு உரிமையாளர்
இந்த நிலையில் அனுராதபுரத்தில் உள்ள இபாலொகாமா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகளுக்கு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெட்ரோல் பங்கு உரிமையாளரின் வீட்டுக்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தின்போது அதன் உரிமையாளர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்திருக்கிறார். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு காவல்துறையிடம் தெரிவித்திருக்கின்றனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதுமாக சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary
Mob in Sri lanka sets fire on Petrol bunk owner
Story first published: Sunday, May 22, 2022, 23:45 [IST]