ஆன்லைன் வகுப்புகள்

கிட்டத்தட்ட இரண்டு வருட ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களின் வழக்கங்களை மாற்றி உள்ளது. பல பெற்றோர்களும் செய்வதறியாது திணறி வருகிறார்கள்.

ஆன்லைன் வகுப்புகள்

கொரோனா தாக்கம் காரணமாக, வழக்கமான நேரடி வகுப்புகள் அல்லாமல் அனைவரும் ஆன்லைன் வகுப்பிலேயே பாடம் எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

தேர்வுகள் முதற்கொண்டு அனைத்தும் ஆன்லைனிலேயே நடந்து, பள்ளி, கல்லூரி செல்லாமலே வகுப்பை மாணவர்கள் கடந்து விட்டனர். Image Credit

நேரடி வகுப்புகள் இருந்த போது கட்டுப்பாட்டில் இருந்த மொபைல் பயன்பாடு, ஆன்லைன் வகுப்பான போது கட்டுப்பாட்டை இழந்து விட்டது.

மாணவர்களுக்கு மொபைல், Tab, மடிக்கணினி ஆகியவற்றைப் பயன்படுத்தியே ஆக வேண்டிய சூழ்நிலையானது.

வேறு வழி இல்லாததால் பெற்றோர் அனுமதித்து வந்தனர்.

விளையாட்டு

இணையம் என்றவுடன் மாணவர்களுக்கு ஆன்லைன் விளையாட்டு, YouTube ஆகியவற்றைப் பயன்படுத்துவது இயல்பாகி விட்டது.

இரு வகுப்புகளுக்கு இடையே உள்ள நேரத்தில் விளையாடி, YouTube பார்த்து வந்தவர்கள், வகுப்பு நேரத்திலேயே பயன்படுத்த துவங்கி விட்டனர்.

சில வீடுகளில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதாலும், மற்ற பணிகளாலும் இதைத் தொடர்ந்து கண்காணித்துக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதனால், வகுப்பு அல்லாத நேரங்களிலும் விளையாட்டு, YouTube என்று நேரத்தை நகர்த்த ஆரம்பித்து விட்டனர்.

தற்போது ஆன்லைன் வகுப்புகள் முடிந்து நேரடி வகுப்புகள் துவங்கி இருக்கும் நிலையில், விளையாட்டுக்கு அடிமையான மாணவர்கள் விளையாட முடியாமல் தவிக்கின்றனர்.

ரொம்பவும் அடிமையான மாணவர்கள் பள்ளிக்கு செல்லவே மறுக்கின்றனர். காரணம், பள்ளிக்கு சென்றால், விளையாட முடியாது என்பதால்.

இன்னும் சிலர் ஆபாச தளங்கள் செல்வதையும் வழக்கமாக்கி விட்டனர்.

பெற்றோர் பலர் இதன் காரணமாகக் கடுமையான மன உளைச்சல் அடைந்து வருகின்றனர்.

என்ன செய்யலாம்?

இதைப்படிக்கும் பெற்றோர் அனைவருக்கும் அவரவர் வீடுகளில் நடக்கும் சம்பவங்கள் நினைவுக்கு வந்து சென்று இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

காரணம், இது ஏதோ ஒரு குடும்பத்தில் நடக்கும் சம்பவமில்லை.

எனவே, பசங்க கிட்ட ரொம்பக் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம். அதிரடியாகச் செயல்பட்டீர்கள் என்றால், எதிர் விளைவுகளையே கொண்டு வரும்.

இவை உங்களுக்கு மேலும் சிக்கலையே கொண்டு வரலாம்.

முதலில் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது, இப்பிரச்சனை உங்கள் வீட்டில் மட்டுமே நடப்பதாகக் கற்பனை கொள்ள வேண்டாம். இது பொதுவான பிரச்சனை.

எனவே, பசங்களிடம் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதில் தடாலடியாகத் தடை போடாமல், மணிக்கணக்காகக் குறைத்துக்கொண்டு வாருங்கள்.

அதோடு தொடர்ச்சியாக விளையாடுவதின் மூலம் ஏற்பட்ட படிப்புப் பாதிப்பை அவர்கள் கோபமடையாதபடி பொறுமையாக எடுத்துக்கூறுங்கள்.

மாணவர்கள் இரு வருடங்களாகப் பள்ளிக்குச் செல்லாமல், அதிகம் படிக்காமல் சோம்பேறி ஆகி இருப்பார்கள்.

எனவே, திடீர் என்று அனைத்தும் அதிகரிக்கும் போது அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். பலவற்றைச் செய்ய மறுப்பார்கள்.

இந்நிலையில் அவர்களிடம் பக்குவமாகப் பேசி மட்டுமே குறைக்க முடியுமே தவிர, முரட்டுத்தனமாகச் செயல்பட்டால், மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

விளையாட்டைத் தடுத்தால்…

திடீர் என்று விளையாட கூடாது என்று தடா போட்டால், பசங்க சந்திரமுகி ஆகி விடுவார்கள். இதுவரை பார்க்காத முகத்தை பார்க்க வேண்டியது இருக்கும்.

விளையாட்டுக்கு அடிமையானவர்களால் உடனடியாக அதை நிறுத்த முடியாது. நிறுத்த முயன்றால், மிக உக்கிரமாக நடந்து கொள்வார்கள்.

எனவே, படிப்படியாக நிறுத்தும் போது அவர்களுடன் பெற்றோர் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.

அவர்களுடைய கவனத்தை வேறு வகையில் திசை திருப்ப வேண்டும்.

வெளியே அழைத்துச் செல்ல வேண்டும், அவர்களுடன் நேரம் செலவழித்து அவர்களுக்கு விளையாட்டைப் பற்றி யோசிக்க நேரம் தராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து ஓரிரு நாட்களிலோ அல்லது ஓரிரு வாரங்களிலோ மாற்றங்களைக் காணலாம்.

பொறுமை தேவை

இப்பிரச்சனை அனைவருக்குமானது என்றாலும், பசங்களிடம் பொறுமையாகக் கையாள வேண்டியது மிக அவசியம் ஆனால், சரி செய்ய முடியாத ஒன்றல்ல.

எதற்கும் அதிரடியாகத் தடை போடாதீர்கள். இரு வருடங்களாகப் பழகியதை இரு நாட்களில் நிறுத்துவது சரியான முறையல்ல.

ஆன்லைன் வகுப்புகள், YouTube மற்றும் விளையாட்டுகளில் அதிக நேரம் செலவிட்டு மற்றவர்களுடன் பழகுவதில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும்.

அதாவது தனிமையை அதிகம் விரும்புவார்கள். எனவே, அவர்களுடன் நேரம் செலவழித்துத்தான் இதை மாற்ற முடியும்.

எனவே, அவர்களிடம் எரிந்து விழாமல், திட்டாமல் பொறுமையாக அவர்களுக்கு விளக்குவது மட்டுமே ஒரே வழி.

என்னடா இது! நம்ம பசங்க இப்படிக் கெட்டுப்போய்ட்டாங்களே, விளையாட்டுக்கு அடிமையாகி விட்டார்களே, பழகும் விதமே மாறி விட்டதே என்று கவலை வேண்டாம்.

முன்னரே கூறியபடி இது அனைத்து வீடுகளிலும் நடக்கும், நடந்த சம்பவங்கள்.

எனவே, வீண் கற்பனைகளை வளர்த்துக்கொண்டு பயப்பட வேண்டாம்.

அவர்களுடன் நேரம் செலவிடுங்கள், ஆன்லைன் விளையாட்டின் ஆபத்தைப் பொறுமையாக விளக்குங்கள். பயன்படுத்தும் நேரத்தை படிப்படியாகக் குறையுங்கள்.

நிச்சயம் மாற்றம் கிடைக்கும். அதற்கு உங்களுக்குத் தேவை பொறுமை மட்டுமே.

தொடர்புடைய கட்டுரைகள்

குழந்தைகளைக் கெடுக்கும் பெற்றோர்கள்

குழந்தைகளை அழைத்துச் செல்லும் முறை தெரியுமா?!

Previous articleFive Seeds Laddu – A Vegan Sweet with a blend of five healthy seeds
Next articleConquer from within Gorgeous outfit from @sameenasofficial #cookwithcomali #…